மேட்டூர், பூலாம்பட்டியில் வருமானம் இன்றி தவிக்கும் மீன்பிடி தொழிலாளர்கள்


மேட்டூர், பூலாம்பட்டியில் வருமானம் இன்றி தவிக்கும் மீன்பிடி தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 8 April 2020 8:51 AM GMT (Updated: 8 April 2020 8:51 AM GMT)

மேட்டூர், பூலாம்பட்டியில் வருமானம் இன்றி மீன்பிடி தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.

சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில்கள் முடங்கி உள்ளன. சேலம் மாவட்ட மக்கள் பெரும்பாலும் மேட்டூர் அணை மீன்களை விரும்பி சாப்பிடுகிறார்கள். மாவட்டத்தை பொறுத்தவரை மேட்டூர், எடப்பாடி பூலாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் அணை, ஆறு, குளம், குட்டைகளில் மீன்களை பிடித்து வியாபாரிகளிடம் கொடுத்து, வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

பூலாம்பட்டியில் காவிரி ஆற்றில் 100-க்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் காவிரி ஆற்றில் மீன் பிடித்து பூலாம்பட்டியில் உள்ள மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்வது இல்லை. இவர்கள் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள மீன்பிடி தொழிலாளர்களும் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். இதனால் மீன் வியாபாரமும் எதிர்பார்த்த அளவு இல்லாததால் வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து மேட்டூரை சேர்ந்த மீன் வியாபாரி கே.குருசாமி கூறியதாவது:-

சுவை மிகுந்த மேட்டூர் அணை மீன்கள் சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு கூட ரெயில்கள் மூலம் அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவால் மேட்டூர் அணையில் மீன் பிடிக்க செல்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து உள்ளது. இதனால் குறைந்த அளவு மீன்களே கிடைக்கிறது. இதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமைகளில் பிற மாவட்டங்களில் இருந்து மீன்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். ஆனால் தற்போது அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. அதே நேரத்தில் தற்போது அரசு ஒதுக்கி உள்ள இடங்களில் மீன் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் தேவையான மீன்களை எங்களால் வழங்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேட்டூரை சேர்ந்த மீன் வியாபாரி கதிர்வேல் என்கிற கதிர்:-

மீன் பிடி தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததால், மீன்வரத்து குறைந்துள்ளது. அதே நேரத்தில் தற்போது மீன்களை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களுக்கு தேவையான மீன்களை வழங்க முடிவது இல்லை. வரத்து குறைவாக இருந்த போதிலும், மீன்கள் விற்பனை அதிகமாக உள்ளது.

பூலாம்பட்டி மீன் பிடிக்கும் தொழிலாளி தமிழரசன்:-

தினமும் காவிரி ஆற்றுக்கு சென்று மீன் பிடித்தாலே எங்களுக்கு போதுமான வருமானம் கிடைப்பதில்லை. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக பூலாம்பட்டி மீன் மார்க்கெட் இயங்காததால், யாரும் மீன் பிடிக்க செல்வதில்லை. அதனால் வருமானமும் இன்றி தவித்து வருகிறோம். மேலும் பூலாம்பட்டி பகுதியில் உள்ள மீனவர்களுக்கு என்று எந்த சங்கமும் இல்லாததால் அரசின் நலத்திட்டங்கள் எதுவும் எங்களுக்கு கிடைப்பதில்லை. மீன்பிடிப்பவர்கள் அதிகம் படிக்காததால் அரசின் உதவிகள் பெறுவது எப்படி என தெரியாமல் உள்ளனர். மீன் பிடிக்கும் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை எங்களுக்கு பெற்று தர அதிகாரிகள் முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மீன்பிடி தொழிலாளர்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் எப்போது மீண்டும் பழைய நிலைமை திரும்பும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

Next Story