கொரோனா தடுப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் சேரலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


கொரோனா தடுப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் சேரலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 9 April 2020 4:00 AM IST (Updated: 9 April 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் சேரலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி, 

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு பணியில் போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள் இணைந்து பணியாற்றுவதற்கான ஆணை பெறப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 60 வயதுக்கு உட்பட்ட திடகாத்திரமான முன்னாள் படைவீரர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதற்கான மதிப்பூதியம் ஏற்கனவே தேர்தல் பணிகளில் வழங்கப்பட்டது போன்று அளிக்கப்படும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம், முன்னாள் படைவீரர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே பணியமர்த்தப்படுவார்கள்.

பணியில் சேரலாம்

ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் நாட்டு நலன் கருதி தாங்களாக முன்வந்து இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) காலையில் தங்களுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை அணுகி பணியில் சேர்ந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பணியின்போது, உரிய பாதுகாப்பு சாதனங்கள் போலீசார் மூலம் வழங்கப்படும். மேலும் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை 0461-2902025 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விருப்பத்தை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story