குணசீலம், வாத்தலை, சிறுகமணி பகுதிகளில் சூறாவளி காற்றில் வேரோடு சாய்ந்த மரங்கள் - வாழைகள் ஒடிந்து விழுந்தன


குணசீலம், வாத்தலை, சிறுகமணி பகுதிகளில் சூறாவளி காற்றில் வேரோடு சாய்ந்த மரங்கள் - வாழைகள் ஒடிந்து விழுந்தன
x
தினத்தந்தி 10 April 2020 3:45 AM IST (Updated: 10 April 2020 8:18 AM IST)
t-max-icont-min-icon

குணசீலம், வாத்தலை, சிறுகமணி பகுதிகளில் சூறாவளி காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து நாசமானது.

கொள்ளிடம் டோல்கேட், 

திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழைபெய்தது. இதில் வாத்தலை அருகே குணசீலம் முதல் ஆமூர் வரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான புளியமரங்கள், ஆலமரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன.

இதுபற்றி தகவலறிந்த குணசீலம் ஊராட்சி தலைவர் குருநாதன், வாத்தலை போலீசார் மற்றும் ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்புபணி குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வாத்தலை போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புபணி குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோன்று குணசீலம், கல்லூர், ஆமூர், மஞ்சக்கோரை, வடக்கு சித்தாம்பூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் வீடுகளின் மேற்கூரைகள், சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும் அப்பகுதியில் 30 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் காற்றில் முறிந்து கீழே சாய்ந்தது.

இதனை ஆமூர் பகுதி வருவாய் ஆய்வாளர் கண்ணன், குணசீலம் கிராம நிர்வாக அலுவலர் லாவண்யா ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் சிறுகமணி, பெட்டவாய்த்தலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென்று சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வாய்க்கால் கரையோரம் இருந்த பழமையான மரங்கள் முறிந்து விழுந்தன. மரம் விழுந்ததில் மின் கம்பங்கள் சில ஒடிந்து விழுந்தன. இதனால் திருப்பராய்த்துறை உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. அவற்றை மின்வாரிய அதிகாரிகள் நேற்று சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பெருகமணி, சிறுகமணி, காவல்காரபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் பயிரிடப்பட்ட வாழைகள் ஒடிந்து விழுந்தன. இதில் ஏராளமான வாழைத்தார்கள் வெட்டும் நிலையில் இருந்தன. ஆலங்கட்டி மழை பெய்ததால் வாழைத்தார்கள் மீது கருப்பு கலரில் புள்ளிகள் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர்.

சேதமடைந்த இடத்தை ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர், அந்தநல்லூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த பகுதியில் பயிரிட்டுள்ள சுமார் 400 ஏக்கர் வாழைகள் சேதமடைந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் இருக்கிற வாழையும் ஒடிந்து விட்டதை எண்ணி கண்ணீர்விட்டதை காணமுடிந்தது. 

Next Story