கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் காணொலி மூலம் கலெக்டர் கலந்துரையாடல்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் காணொலி மூலம் கலெக்டர் கந்தசாமி கலந்துரையாடினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த அறையை கலெக்டர் கந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கிருந்தவாறே கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களுடன் காணொலி மூலம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் டாக்டர்கள் பேசி ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது கலெக்டரிடம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தினமும் அவர்களுக்கு ஏற்படும் சமூக பிரச்சினைகள் குறித்து கூறினர். மேலும் தங்களுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை என்றும் கூறினர். பதிலளித்த கலெக்டர் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகி விடுவிக்கப்பட்டவுடன் அவர்களின் வீடுகளில் பூரணமாக குணமடைந்து விட்டார் என்று அறிவிப்பு ஒட்டப்படும். வேறு ஏதேனும் உதவி வேண்டும் என்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு தொடர்ந்து இரண்டு முறை பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளது. அவர் நாளை (இன்று) மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.
மேலும் உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் 69 பேர்களின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது வழக்கமான நாட்களில் உதவியாளர், உறவினர்கள் உடன் இருந்து பார்த்து கொள்வார்கள். ஆனால் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடையாது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக கொரோனா வைரஸ் நோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்களுடன் அவர்கள் இல்லத்திலிருந்து சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களுடன் காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடும் முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை, முன்னேற்றம் குறித்து விளக்கினார்கள். மேலும் நோயாளிகளின் உறவினர்களும் வெளியில் வர முடியாமல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் ஆலோசனைகளும் அளிக்கப்பட்டது. அவர்களின் சந்தேகங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டு, கோரிக்கைகள் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லாவண்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்மோகன், துணை கலெக்டர் (பயிற்சி) மந்தாகினி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story