வங்கி கணக்கு விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும்; தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகை - மாநகராட்சி அறிவிப்பு


வங்கி கணக்கு விவரங்களை உடனடியாக வழங்க வேண்டும்; தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகை - மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 11 April 2020 11:04 PM GMT (Updated: 11 April 2020 11:04 PM GMT)

தெருவோர வியாபாரிகள் ரூ.1000 நிவாரண தொகை பெற, தங்கள் வங்கி கணக்கு விவரங்களை உடனடியாக மாநகராட்சிக்கு வழங்க வேண்டும் என கமிஷனர் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து, அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கும் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் 27 ஆயிரத்து 195 பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் உள்ளனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இதுவரை வங்கி கணக்கு விவரங்களை வழங்காத, பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வங்கியின் பெயர் மற்றும் கிளை முகவரி, சேமிப்பு கணக்கு எண், கிளை குறியீட்டு எண், ஐ.எப்.எஸ்.சி குறியீட்டு எண் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை எண், வியாபாரியின் தொலைபேசி எண் ஆகியவற்றின் நகல்களை கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு வழிமுறைகளில் தகவல்களை வழங்க வேண்டும்.

அதன்விவரம் வருமாறு:-

1. சம்பந்தப்பட்ட மண்டல நகர விற்பனைக் குழு, மண்டல அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வழங்கலாம்.

2. ar-o-h-q-p-r-op1@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக அனுப்பலாம்.

3. ‘9499932899’ என்ற தொலைபேசி எண்ணுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலமாக அனுப்பலாம்.

4. www.ch-e-n-n-a-i-c-o-r-p-o-r-at-i-on.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் அனுப்பலாம்.

மேலும் சம்பந்தப்பட்ட மண்டல நகர விற்பனைக்குழு அலுவலகத்தில் விவரங்களை வழங்க மண்டல அலுவலகத்துக்கு வரும்போது கொரோனா தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த தகவல்களை வியாபாரிகள் வழங்கும் பட்சத்தில் நிவாரண தொகை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story