அந்தியூரில் திடீர் சரணாலயமாக மாறிய கெட்டிசமுத்திரம் ஏரி; வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்தன


அந்தியூரில் திடீர் சரணாலயமாக மாறிய கெட்டிசமுத்திரம் ஏரி; வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்தன
x
தினத்தந்தி 14 April 2020 10:30 PM GMT (Updated: 14 April 2020 7:40 PM GMT)

அந்தியூர் கெட்டிசமுத்திரம் ஏரி திடீர் சரணாலயமாக மாறியது. வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்தன.

அந்தியூர், 

அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் கெட்டி சமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதன் முழு கொள்ளளவான 16 அடியை எட்டி அதன் உபரி நீர் வெளியேறியது. 9 ஆண்டுகளுக்கு பின்பு இந்த முழு கொள்ளளவை ஏரி எட்டியுள்ளது.

வெளிநாட்டு பறவையான செங்கால் நாரை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் இனப்பெருக்கத்துக்காக இந்தியாவுக்கு வரும். அதேபோல் இந்த ஆண்டு இனப்பெருக்கத்துக்காக கெட்டிசமுத்திரம் ஏரிக்கு கூட்டம் கூட்டமாக வந்து குவிந்துள்ளன. மேலும் நீர் வாத்து, கொக்கு நாரை போன்ற பல்வேறு பறவைகளும் ஏரியில் காணப்படுகின்றன. இந்த பறவைகள் அனைத்தும் தினமும் பகலில் ஏரி தண்ணீரில் நீந்திக் கொண்டு அப்பகுதியில் உள்ள மீன்களை உணவாக உட்கொள்கின்றன. மாலை 6 மணி ஆனதும் பறவைகள் அனைத்தும் ஏரி பகுதிகளில் உள்ள ஒவ்வொரு மரங்களில் தஞ்சம் புகுந்துவிடுகின்றன.

கெட்டிசமுத்திரம் ஏரியில் வளர்ந்துள்ள மரக்கிளைகளில் செங்கால் நாரை ஒரு கூட்டமாகவும், நீர் வாத்து ஒரு மரத்திலும், கொக்கு ஒரு மரத்திலும் நாரைகள் ஒரு மரத்திலும் அமர்ந்து கொள்கின்றன. இதனால் கெட்டிசமுத்திரம் ஏரி சரணாலயம் போல் காட்சி அளிக்கிறது. ஜூலை மாதம் செங்கால் நாரை மீண்டும் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்பிவிடும். 

அதேபோல் அந்தியூரில் பெரிய ஏரி பகுதிக்கும் ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. காலை முதல் மாலை வரை ஏரியில் உள்ள மீன்களை உணவாக உட்கொள்ளும் பறவைகள், மாலை நேரங்களில் அங்குள்ள மரங்களில் தங்குகின்றன. அப்போது பறவைகள் ரீங்காரமிடும் சத்தம் கேட்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து செல்கின்றனர்.

Next Story