பொதுமக்களிடம் ஆர்வமில்லாததால் பூக்கள் விலை கடும் சரிவு


பொதுமக்களிடம் ஆர்வமில்லாததால் பூக்கள் விலை கடும் சரிவு
x
தினத்தந்தி 16 April 2020 9:30 PM GMT (Updated: 16 April 2020 8:59 PM GMT)

பொதுமக்களிடம் பூக்கள் வாங்கும் ஆர்வம் இல்லாததால் அதன் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.

மதுரை,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் மதுரையில் பூ மார்க்கெட் மூடப்பட்டது. தற்போது அரசு உத்தரவுப்படி பகுதி நேரமாக காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. மதுரையில் ஆரப்பாளையம், ஈ.வெ.ரா. மேல்நிலைப்பள்ளி மற்றும் ரேஸ் கோர்ஸ் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் பூ மார்க்கெட் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில் உசிலம்பட்டி, சின்னஉடப்பு, பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த பூக்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது கோவில் விழாக்கள், திருமண சுப நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததாலும், தற்போது பூ மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ள பகுதி புதிய பகுதி என்பதாலும் மார்க்கெட்டிற்கு குறைந்த அளவே பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

விஷேச காலங்களில் கிலோ ரூ.2000 முதல் ரூ.3000 வரை விற்பனை செய்யக்கூடிய மல்லிகைப்பூக்கள் 180 ரூபாய்க்கே விற்கப்பட்டது. அதே போல் கோழிக்கொண்டை பூ 30 ரூபாய்க்கும், பிச்சிப்பூ ரூ.140, செவ்வந்திப்பூ ரூ.60, கனகாம்பரம் ரூ.60, செவ்வரளி ரூ.100 என குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.

மேலும் பூ வியாபாரிகள் வீடு வீடாக சென்று உதிரி பூக்களை விற்றனர். அவர்கள் மல்லிகைப்பூ 100 கிராம் 30 ரூபாய்க்கு விற்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,“ஊரடங்கு உத்தரவால் பூக்களை பறிக்க முடியாததால் செடியிலேயே கருகின. போக்குவரத்து வசதி இல்லாததாலும், வெளியில் செல்ல அனுமதி இல்லாததாலும் பூக்களை பறிக்காமல் விட்டு விட்டோம். தற்போது பூ பறித்து விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பூக்களைப் பறித்து வந்து விற்பனை செய்கிறோம்.

குறைந்த விலை போனாலும் பரவாயில்லை என விற்பனை செய்கிறோம். மேலும் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களிடம் பூக்கள் வாங்கும் ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. இதுவே பூக்கள் விலை சரிவுக்கு முக்கிய காரணமாகும். மேலும் மார்க்கெட்டுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி பொதுமக்கள் அறியாத பகுதி என்பதால் குறைந்த எண்ணிக்கையிலேயே வாடிக்கையாளர் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்” என்றார்.

Next Story