கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் ஆய்வு


கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 18 April 2020 11:15 PM GMT (Updated: 18 April 2020 8:47 PM GMT)

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சேலம்,

சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகளான டாஸ்மாக் இயக்குனர் கிர்லோஸ்குமார், காவல்துறை கூடுதல் இயக்குனர் மஞ்சுநாதா ஆகியோர் நேற்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சை முறைகள் குறித்து, அங்கு பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதனிடம் கேட்டறிந்தனர்.

மேலும், ஆஸ்பத்திரியில் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளதா? என டாக்டர்களிடம் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் கேட்டறிந்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு அதிகாரிகள் கிர்லோஸ்குமார், மஞ்சுநாதா ஆகியோர் பல ஆலோசனைகளை வழங்கினர். அப்போது அவர்கள் அரசு விதிமுறைகளை நோயாளிகள் முறையாக பின்பற்றுகிறார்களா? ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து அஸ்தம்பட்டி சிறைச்சாலை முனியப்பன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைக்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது, சந்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் குறித்தும், பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் காய்கறிகளை வாங்கி செல்வதை கண்காணிக்க வேண்டும் என்றும் அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்களிடம் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் கிர்லோஸ்குமார், மஞ்சுநாதா ஆகியோர் ஆலோசனை கூறினர். எடப்பாடி நகராட்சி பகுதியிலும், மேட்டூர் நகராட்சி பகுதியிலும் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளையும் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Next Story