நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 9 இடங்களில் தீவிர கண்காணிப்பு - கலெக்டர் ஷில்பா தகவல்


நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 9 இடங்களில் தீவிர கண்காணிப்பு - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 20 April 2020 11:15 PM GMT (Updated: 20 April 2020 7:18 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 9 இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான 9 இடங்களில் பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம், மேலப்பாளையம் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அந்த பகுதிகளில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மண்டல சிறப்பு அதிகாரி கருணாகரன், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், கலெக்டர் ஷில்பா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

பின்னர் கலெக்டர் ஷில்பா கூறுயதாவது:-

9 பகுதிகள் கண்காணிப்பு

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு மருத்துவ சிகிச்சை, பாதுகாப்பு, அத்தியாவசிய பொருட்கள், நிவாரண பணிகள் என பல்வேறு பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து பொதுமக்களை காத்து வருகிறது.

கொரோனா நோய் தொற்று தாக்கம் அதிகமுள்ள பகுதிகளான மேலப்பாளையம், என்.ஜி.ஓ. காலனி, நெல்லை டவுன் கோடீசுவரன் நகர், நெல்லை டவுன், பேட்டை, பாளையங்கோட்டை சிவன் கோவில் தெரு, பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள டார்லிங்நகர், களக்காடு, பத்தமடை ஆகிய 9 பகுதிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள்

கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ள மக்களை விரைவு பரிசோதனை செய்வதுடன், தேவையானவர்களுக்கு, மருத்துவ சிகிச்சை, அத்தியாவசிய பொருட்கள், நிவாரண நிதி உள்ளிட்டவை தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் மண்டல சிறப்பு குழவினர் ஆய்வு செய்து அங்குள்ள போலீசார், அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த பகுதிகளில் நவீன எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டு, கூடுதலாக முககவசங்கள், கையுறைகள் வழங்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மாநகர நகர்நல அலுவலர் சதிஷ்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் வரதராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story