சாத்தூர் பகுதியில் தீப்பெட்டி ஆலைகள் மீண்டும் இயங்கின


சாத்தூர் பகுதியில் தீப்பெட்டி ஆலைகள் மீண்டும் இயங்கின
x
தினத்தந்தி 22 April 2020 4:00 AM IST (Updated: 22 April 2020 3:14 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் பகுதியில் தீப்பெட்டி ஆலைகள் மீண்டும் செயல்பட தொடங்கின.

சாத்தூர், 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஊரடங்கினால் மூடப்பட்டன. இதனால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் சுமார் ஒரு மாத காலமாக வேலைவாய்ப்பு இழந்து தவித்தனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவாத இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளை இயக்குவதற்கு அந்தந்த மாநில அரசுகளே முடிவு எடுத்து கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் சாத்தூர் பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுழற்சி முறையில் பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதன்படி சாத்தூர் பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பகுதி எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள், தீக்குச்சி தொழிற்சாலைகள், மருந்து முக்கிய குச்சிகளை பெட்டிக்குள் அடைக்கும் நிறுவனங்கள் போன்றவை நேற்று செயல்பட்டன. அங்கு தொழிலாளர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வேலை செய்தனர்.

முதல் கட்டமாக பகலில் மட்டுமே தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்களை அவர்களது வீடுகளில் இருந்து தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு அழைத்து வரவும், வேலை முடிந்த பின்னர் அவர்களை வீடுகளுக்கு அழைத்து செல்லவும் வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.

இன்று(புதன்கிழமை) முதல் சாத்தூர் பகுதியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான தீப்பெட்டி தொழிற்சாலைகளும் வழக்கம்போல் செயல்படும். அங்கு தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து சுகாதாரமான முறையில் பணியாற்றுவார்கள். தொழிலாளர்களை அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story