ஓசூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு: பிரபல ரவுடி உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது


ஓசூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு: பிரபல ரவுடி உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 29 April 2020 11:15 PM GMT (Updated: 29 April 2020 8:00 PM GMT)

ஓசூரில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உள்பட 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இமாம்பாடா பகுதியை சேர்ந்தவர் மன்சூர் அலி (வயது 55). இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளராக இருந்தார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 2-ந் தேதி இரவு ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு நடைபயிற்சிக்கு சென்ற அவர் ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஓசூர் சாந்திநகரை சேர்ந்த கஜா என்ற கஜேந்திரன்(32), ஓசூர் அருகே எஸ்.முதுகானபள்ளியை சேர்ந்த கிச்சு என்ற சந்தோஷ்குமார் (25), தேன் கனிக்கோட்டை அருகே மருதாளப்பள்ளியை சேர்ந்த யஷ்வந்த்குமார்(25), தளி கொத்தனூரை சேர்ந்த அலிபாபா என்ற கோவிந்தராஜ் (23) ஆகிய 4 பேர் சரணடைந்தனர்.

மேலும் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த குலு என்ற ஜிதின்(30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், முன் விரோதம் காரணமாக, மன்சூர் அலி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் 5 பேரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று மாவட்ட கலெக்டர் பிரபாகர், கஜா உள்பட 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

ஓசூரை சேர்ந்த பிரபல ரவுடியான கஜா என்ற கஜேந்திரன், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் சூரி என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார் என்றும், அந்த வழக்கில் குண்டர் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டார் என்றும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story