மானாமதுரையில் சிக்கி தவித்த வடமாநிலத்தவர்கள் தனி வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்றனர்


மானாமதுரையில் சிக்கி தவித்த வடமாநிலத்தவர்கள் தனி வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்றனர்
x
தினத்தந்தி 1 May 2020 12:14 AM GMT (Updated: 2020-05-01T05:44:33+05:30)

மானாமதுரையில் சிக்கி தவித்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தனி வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சிவகங்கை, 

மகாராஷ்டிரா மாநிலம் ஜெபல்பூரில் இருந்து 8 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 12 பேர் கடந்த மார்ச் மாதம் ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்தனர். அப்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் 12 பேரும் மானாமதுரையில் சிக்கி தவித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் தங்கியிருந்தனர்.

இவர்களுக்கு மானாமதுரை தாசில்தார் மூலம் இடவசதி, உணவு ஆகியவை வழங்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் அவர்களில் வயதான 6 பேர் மட்டும், மானாமதுரையில் தங்கியிருக்க பெரிதும் சிரமப்பட்டனர். அதைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் ஜெபல்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு பேசி, மானாமதுரையில் இருந்த 12 பேரையும் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

இதையடுத்து 12 பேருக்கும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து உடல்நிலை முழுஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அதற்கான சான்றிதழ்களை தனித்தனியாக அவர்களிடம் வழங்கி, 12 பேரையும் தனி வாகனத்தில் ஜெபல்பூருக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story