பித்தளை பாத்திரங்கள் உற்பத்தியை முடக்கிய ஊரடங்கு வேலை இன்றி தவிக்கும் தொழிலாளர்கள்
கொரோனா ஊரடங்கு பித்தளை பாத்திரங்கள் உற்பத்தியை முற்றிலும் முடக்கி விட்டது. இதனால் பித்தளை பாத்திர தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.
நெல்லை,
கொரோனா ஊரடங்கு பித்தளை பாத்திரங்கள் உற்பத்தியை முற்றிலும் முடக்கி விட்டது. இதனால் பித்தளை பாத்திர தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறக்கப்படுகின்றன. அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.
பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி
நெல்லை மாநகர பகுதியில் பித்தளை பாத்திர கடைகள் அதிகம் உள்ளன. குறிப்பாக ரத வீதிகளில் பெரிய பாத்திர கடைகள் இருக்கின்றன. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளின் போது, சீர் கொடுப்பதற்காக சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இங்கு வந்து பாத்திரங்களை வாங்கி செல்கிறார்கள்.
நெல்லை மாநகர பகுதியில் மட்டும், பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பு தொழிலில் சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக நெல்லை டவுன், பழையபேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் அதிக அளவில் பித்தளை பட்டறைகள் இருந்தன. ஆனால், தற்போது இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. தொழிலாளர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். பட்டறைகளும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பித்தளை பாத்திரங்கள் உற்பத்தியை முற்றிலும் முடக்கி விட்டது. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் வேலை இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
நிவாரணம்
இதுகுறித்து நெல்லை மாநகர பித்தளை பாத்திர உற்பத்தி தொழிலாளர் சங்க தலைவர் முருகன் கூறியதாவது:-
நாங்கள் தினந்தோறும் வேலை செய்தால் ரூ.300 முதல் ரூ.500 வரை வருமானம் கிடைக்கும். கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பாத்திர கடைகளும் மூடப்பட்டு விட்டன. இதனால் எங்களுக்கு வேலை இல்லை. 30 நாட்களுக்கும் மேலாக நாங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
எங்கள் சங்கத்தை சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவில்லை. இதனால் அவர்களுக்கு அரசின் சலுகைகள் மற்றும் உதவித்தொகை கிடைப்பது இல்லை. அரசு பித்தளை பாத்திர தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.3 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story