சொந்த ஊருக்கு செல்ல அனுமதி சீட்டு வழங்கக்கோரி தனியார் மருத்துவமனை முன்பு குவிந்த வடமாநிலத்தவர்களால் பரபரப்பு


சொந்த ஊருக்கு செல்ல அனுமதி சீட்டு வழங்கக்கோரி தனியார் மருத்துவமனை முன்பு குவிந்த வடமாநிலத்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 May 2020 9:23 AM IST (Updated: 1 May 2020 9:23 AM IST)
t-max-icont-min-icon

சொந்த ஊருக்கு செல்ல அனுமதி சீட்டு வழங்கக்கோரி தனியார் மருத்துவமனை முன்பு குவிந்த வடமாநிலத்தவர்களால் பரபரப்பு.

வேலூர்,

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த பிறமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு பஸ்களில் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் சிகிச்சைக்காக வேலூருக்கு வந்த வடமாநிலத்தவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல அனுமதி சீட்டு வழங்கக்கோரி சி.எம்.சி. மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். அவர்கள் மருத்துவமனை வரவேற்பு அறையில் அனுமதி சீட்டு வழங்கக்கோரினர். அதையடுத்து அங்கிருந்த காவலாளிகள் அவர்களை மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேற்றினர்.

தொடர்ந்து வடமாநிலத்தவர்கள் வேலூர்-ஆற்காடு சாலையில் மருத்துவமனையின் முன்பு சமூக இடைவெளி இல்லாமல் நின்று கொண்டிருந்தனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படியும், ஊருக்கு செல்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறினர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோன்று வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வடமாநிலத்தவர்கள் அனுமதி சீட்டு வழங்கக்கோரி நேற்று காலை 9 மணி முதல் வந்தனர். அவர்களை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதுதொடர்பான அறிவிப்பு வந்த பின்னர் அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று திருப்பி அனுப்பினர்.


Next Story