மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி, மகனுக்கு கொரோனா பாதிப்பு


மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி, மகனுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 2 May 2020 11:00 PM GMT (Updated: 2020-05-03T04:16:09+05:30)

மதுரவாயலில் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி, மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

பூந்தமல்லி, 

சென்னை மதுரவாயல் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் மாங்காடு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதியானது. இதனால் சப்-இன்ஸ்பெக்டரின் குடும்பம் மற்றும் அந்த குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி மற்றும் மகனுக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் அங்கு வசிக்கும் குழந்தை பெற்றெடுத்த பெண் போலீஸ் மற்றும் அவரது சகோதரிக்கும் கொரோனா உறுதியானது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோல் புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கோயம்பேடு சென்று காய்கறிகளை வாங்கி வந்தார். அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்த 34 வயதான கர்ப்பிணி, கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கி வந்த செங்குன்றத்தை சேர்ந்த வியாபாரி, கிரான்ட்லைன் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், ராயபுரம் மண்டலத்தில் வேலை பார்த்த சாலை பணியாளர், திருமழிசையில் ஒருவர், கரையான்சாவடி பகுதியில் ஒருவர் என 6 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திரு.வி.க. நகர் மண்டலம்

சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தில் உள்ள ஓட்டேரியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி மற்றும் அவர்களுடைய 3 பிள்ளைகள் என ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

புளியந்தோப்பில் 2 கர்ப்பிணிகள் உள்பட 7 பேர், செம்பியம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும் பேசின் பிரிட்ஜ் பகுதியில் 6 பேர் உள்பட நேற்று திரு.வி.க நகர் மண்டலத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் திரு.வி.க.நகர் மண்டலத்தில் 281 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

14 நாட்களே ஆன குழந்தை

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பஜார் வீதியில் கருவாடு மண்டி நடத்தி வந்த 22 வயது பெண்ணுக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அந்த பெண்ணின் தாய், தந்தை, அக்காள் கணவர் மற்றும் அவரது பிறந்து 14 நாட்களே ஆன குழந்தை உள்பட 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

இதேபோல் முக கவசம் தயாரிக்கும் கம்பெனியில் வேலைபார்த்து வந்த குன்றத்தூர் தச்சு தெருவை சேர்ந்த 40 வயது பெண், கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைப்பார்த்த உத்திரமேரூரை அடுத்த பெருநகர் கிராமத்தை சேர்ந்த 7 பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு சென்று காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்த வண்டலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த கடைக்காரர் மற்றும் பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதிக்குட்பட்ட நசரத்புரம், சித்தாலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 3 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

Next Story