திருச்சி ஆரஞ்சு மண்டலமாக மாறியதால் வழக்கத்தைவிட வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிப்பு


திருச்சி ஆரஞ்சு மண்டலமாக மாறியதால் வழக்கத்தைவிட வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 May 2020 3:21 AM GMT (Updated: 2020-05-03T08:51:31+05:30)

திருச்சி ஆரஞ்சு மண்டலமாக மாறியதால், வழக்கத்தைவிட வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்து காணப்பட்டது.

திருச்சி, 

திருச்சி ஆரஞ்சு மண்டலமாக மாறியதால், வழக்கத்தைவிட வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்து காணப்பட்டது.

மொத்த வியாபாரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ஆஸ்பத்திரிக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்பட்டு விட்டாலும், அதை சுற்றியுள்ள வெல்லமண்டி பகுதி, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்த வியாபார மளிகை கடைகள், அரிசி கடைகள், எண்ணெய் கடைகள் உள்ளிட்டவைகளில் பொருட்கள் வாங்க தினமும் சாலைகளில் நாலாபுறங்களில் இருந்தும் இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் என சாரை, சாரையாக வந்து கொண்டேதான் உள்ளது.

ஆரஞ்சு மண்டலம்

ஊரடங்கு வேளையில் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்ததை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இந்தநிலையில் பெரிய கடைவீதி நுழைவு வாயில் வளைவு பகுதியில் இரும்பு தடுப்புகளை அமைத்து அங்கு போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே, மாவட்ட நிர்வாகம் அறிவித்ததுபோல வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதியில் இருந்துதான் வருகிறார்களா? என்பதை அறிய முகவரிக்கான ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை உள்ளதா? என சோதனை செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்ததையொட்டி திருச்சி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறி உள்ளது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நேற்று நடைமுறைக்கு வரவில்லை.

அதிகரித்த மக்கள் கூட்டம்

இந்தநிலையில் திருச்சி மாநகரில் நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. திருச்சி ஜங்ஷன், பாலக்கரை, எடத்தெரு, தில்லைநகர், சத்திரம் பஸ் நிலையம், கே.கே.நகர், உறையூர் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் இருந்தது.

போலீசார் தற்போது வாகனங்கள் பறிமுதல் செய்வதில்லை என்பதாலும், ஆரஞ்சு மண்டலமாக திருச்சி மாறிவிட்டதாலும் தடைஏதும் இருக்காது என்ற எண்ணத்தில் அதிக அளவில் மக்கள் வீதிக்கு வரத் தொடங்கி விட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story