குழந்தைகளுடன் சாலையோரத்தில் குடியேறிய தொழிலாளி வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் பரிதாபம்


குழந்தைகளுடன் சாலையோரத்தில் குடியேறிய தொழிலாளி வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் பரிதாபம்
x
தினத்தந்தி 3 May 2020 4:50 AM GMT (Updated: 3 May 2020 4:50 AM GMT)

வெள்ளியணை அருகே, வீட்டு வாடகை கொடுக்க முடியாததால், குழந்தைகளுடன் தொழிலாளி சாலையோரத்தில் குடியேறினார்.

வெள்ளியணை, 

வெள்ளியணை அருகே, வீட்டு வாடகை கொடுக்க முடியாததால், குழந்தைகளுடன் தொழிலாளி சாலையோரத்தில் குடியேறினார்.

சாலையோரத்தில் குடியேறினார்

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மணவாடி பெரியார்நகர் காலனியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் அதே பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டில், வாடகைக்கு குடியிருந்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், கூலி வேலைக்கு கூட செல்ல முடியாமல், குடும்பத்தை நடத்த அன்றாட செலவுக்கே வருமானமின்றி நாகராஜன் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.

இதனால் கடந்த மாதம் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வீட்டின் உரிமையாளர், நாகராஜனிடம் முன்பணம் ரூ.5 ஆயிரத்தையும், வாடகை பாக்கியையும் உடனடியாக தர வேண்டும் என்றும், இல்லையேல் வீட்டை உடனடியாக காலி செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் செய்வதறியாது தவித்த நாகராஜன், வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் கரூர்-வெள்ளியணை சாலையின் ஓரத்தில், மணவாடி அருகே அமர்ந்திருந்தார்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு வந்து, நாகராஜனிடம் விவரம் கேட்டறிந்தனர். பின்னர் வீட்டு உரிமையாளரை அழைத்து, போலீசார் பேசினர். அப்போது நாகராஜன், ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் வீட்டு வாடகை பாக்கியையும், முன்பணத்தையும் தருவதாக ஒத்துக்கொண்டார்.

அதுவரை அவரை வீட்டை காலி செய்ய நிர்பந்திக்கக்கூடாது என உரிமையாளரிடம் போலீசார் கூறினர். இதை வீட்டு உரிமையாளர் ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து கட்டில் உள்ளிட்ட பொருட்களுடன் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வாடகை வீட்டுக்கு மீண்டும் நாகராஜன் சென்றார். இந்த சம்பவம் நேற்று வெள்ளியணை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story