கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாமாக தகவல் தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் ராமன் வேண்டுகோள்


கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாமாக தகவல் தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் ராமன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 May 2020 3:10 AM IST (Updated: 4 May 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்திருந்தாலோ, அங்கு பணிபுரிந்து திரும்பிவந்திருந்தாலோ அவர்கள் தாமாக முன்வந்து அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சேலம் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகள் இவற்றில் ஒன்றுக்கு நேரில் வந்து தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

மேலும், இதுகுறித்த விவரங்களை சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களான 0427-2450498, 2450022, 2450023, 73058 68942 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்தவர்கள் குறித்து தகவல் தெரிவிக்காமல் இருந்தால் அவர்கள் மீது காவல் துறையின் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் no-n-r-es-i-d-e-ntt-a-m-il.org என்ற இணைய முகப்பில் உள்ள “ Retu-rn to tam-il nadu ” என்ற இணைய படிவம் மூலம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அனுமதி பெற்று வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகை தரும் நபர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.

மத்திய அரசால் நோய்தொற்றின் அளவு மற்றும் தன்மை அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்பாடு செய்யப்பட்டு அந்த பகுதிகளில் உள்ள நோய் தடுப்பு பகுதிகளை தவிர மற்றபகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்குவதற்கும், திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வாகன அனுமதி சீட்டு பெற தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள tne-pass.tne-ga.org என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இ-பாஸ் வேண்டி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story