முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டும் நெல்லையில் வெறிச்சோடிய காய்கறி மார்க்கெட்


முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டும் நெல்லையில் வெறிச்சோடிய காய்கறி மார்க்கெட்
x
தினத்தந்தி 4 May 2020 1:48 AM GMT (Updated: 2020-05-04T07:18:05+05:30)

நெல்லையில் முழு ஊரடங்கு அறிவித்து வாபஸ் பெறப்பட்டும் நெல்லையில் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் வெறிச்சோடின.

நெல்லை, 

நெல்லையில் முழு ஊரடங்கு அறிவித்து வாபஸ் பெறப்பட்டும் நெல்லையில் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் வெறிச்சோடின.

முழு ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நெல்லை மாநகராட்சி சார்பில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையில் உள்ள காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களின் கடைகள், இறைச்சி கடைகளில் நேற்று முன்தினம் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. போட்டி போட்டு கொண்டு காய்கறிகளை வாங்கி சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஊரடங்கு விலக்கி கொள்வதாகவும், வழக்கம் போல் ஊரடங்கில் செயல்படுவது போல் கடைகள் திறந்து இருக்கும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. நெல்லை நயினார்குளம் மார்க்கெட், நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள காய்கறி கடைகள், பாளையங்கோட்டை பகுதியில் தற்காலிக காய்கறி கடைகள் திறக்கப்பட்டன.

காய்கறி கடைகள் வெறிச்சோடின

அந்த கடைகளில் மக்கள் கூட்டம் இல்லை. ஒரு சிலர் மட்டும் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். வழக்கமாக மக்கள் வருவது போல் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்லவில்லை. இதனால் காய்கறி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பாளையங்கோட்டை மகராஜநகர் உழவர் சந்தை காய்கறி கடைகளும், நெல்லை டவுன் கண்டியப்பேரி உழவர் சந்தையும் திறக்கப்பட்டது. வழக்கம் போல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடைகள் திறந்து இருந்தன. ஆனால் காய்கறி வாங்க பொதுமக்கள் வரவில்லை. இதனால் காய்கறிகள் அதிகம் விற்பனையாகவில்லை.

இறைச்சி கடைகள்

நெல்லை டவுன் ஆர்ச் அருகே ஆட்டு இறைச்சி, கோழி, மீன் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஒரு சிலர் மட்டும் வந்து இறைச்சி வாங்கி சென்றனர். அதேபோல் பாளையங்கோட்டை பெல் பள்ளி மைதானத்தில் உள்ள இறைச்சி கடைகளிலும் கூட்டம் இல்லை.

Next Story