கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் - தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் வலியுறுத்தல்


கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் - தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 May 2020 12:00 AM GMT (Updated: 4 May 2020 7:47 PM GMT)

கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் 40 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கும் அனைத்து கடைகளையும் திறந்து குறிப்பிட்ட நேரத்தில் விதிமுறைகளின்படி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தங்கபாண்டியன் ஆகிய 4 பேரும் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கண்ணனை சந்தித்தனர். அப்போது மாவட்டத்தில் தொழில்கள், வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிப்பது குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கலெக்டரை சந்தித்து விருதுநகர் மாவட்டத்தில் தொழில், வணிக நிறுவனங்கள் விதிமுறைகளின் படி செயல்பட அனுமதி அளிக்குமாறு வலியுறுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி மற்றும் சிறு, குறு தொழில்கள், நூற்பாலைகள், வணிகநிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்குமாறு கலெக்டரிடம் கூறியதுடன் அது தொடர்பான கருத்துகளையும் தெரிவித்தோம். நாளை முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

விருதுநகர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் 40 நாட்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கின்றன. கடைக்குள் என்ன நடந்தது என்றே கடை உரிமையாளருக்கு தெரியாத நிலை உள்ளது. எனவே கடைகள் அரசு அறிவித்த விதிமுறைகளின்படி குறிப்பிட்ட நேரத்தில் திறந்து செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். இதற்கு ஏற்பாடு செய்வதாக கலெக்டர் உறுதி அளித்தார். தொழில் அதிபர்களும், தொழிலாளர்களும், வணிகர்களும், பொதுமக்களும் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story