மது வாங்க அலைமோதிய மதுப்பிரியர்கள்: சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் போலீசார் தடியடி
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் மது வாங்க மதுப்பிரியர்கள் அலைமோதினர். அப்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் போலீசார் தடியடி நடத்தினார்கள்.
ஓசூர்,
உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி, அனைத்து வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சினி்மா தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு உள்ளன.
மேலும், தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 40 நாட்களாக மதுக்கடைகள், பார்களும் அடைக்கப்பட்டன. இதனால், மதுப்பிரியர்கள் மது அருந்த வழியின்றி தடுமாறினர். இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சி விற்பது அதிகரித்தது. சாராயம் காய்ச்சுபவர்களும், விற்பவர்களும் நாள்தோறும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், கர்நாடக மாநில அரசு ஊரடங்கு உத்தரவில் சிறிது தளர்வை ஏற்படு்த்தி மாநிலம் முழுவதும் நேற்று முதல் மதுக்கடைகளை காலை 9 மணியிலிருந்து இரவு 7 மணி வரை திறந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. மேலும், மதுக்கடைகளில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று காலை 9 மணி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள மதுக்கடைகளில் மது வாங்க அதிகாலை முதலே மதுப்பிரியர்கள் குவிந்தனர்.
நீண்ட வரிசையில் நின்று, முககவசம் அணிந்தவாறு சமூக இடைவெளியை கடைபிடித்து, ஒருவர் பின் ஒருவராக சென்று தங்களுக்கு பிடித்த மது வகைகளை வாங்கிச்சென்றனர். மேலும் சிலர், திடீரென கடைகளை மீண்டும் மூடிவிட்டால் என்ன செய்வது? என்ற ஏக்கத்தில், அதிகம் குடித்து விட்டு கடைகள் அருகே போதையில் விழுந்து கிடந்தனர்.
அத்திப்பள்ளி எல்லையில் உள்ள மதுக்கடைகள் பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா தியேட்டர் இருந்தது. அப்போது, எம்.ஜி.ஆர். நடித்த படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்க்க, ரசிகர்கள் இப்படித்தான் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்து முண்டியடிப்பார்கள். தற்போது, மது வாங்க மதுப்பிரியர்கள் இப்படி நீண்ட வரிசையில் காத்து நிற்பதை பார்க்கும் போது அந்த காட்சிதான் நினைவுக்கு வருகிறது என்று ஓசூரை சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் வியப்புடன் கூறினார்.
இதற்கிடையே ஓசூர் தொழிற்பேட்டை அருகே கர்நாடக எல்லையில் உள்ள பள்ளூர் என்ற இடத்தில் மதுக்கடைகள் முன்பு மதுப்பிரியர்கள் குவிந்த நிலையில், கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. முக கவசமும் அணியவில்லை. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். இதில், வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள் ஆளுக்கொரு திசையில் சிதறி ஓடினார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், அத்திப்பள்ளி நகர் மற்றும் ஆனேக்கல் ஆகிய இடங்களில் உள்ள மதுக்கடைகள் முன்பும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த கடைகளுக்கு கர்நாடகம் மட்டுமின்றி, அருகிலுள்ள ஓசூர் பகுதியை சேர்ந்த ஏராளமான மதுப்பிரியர்களும் சென்று மது வகைகளை வாங்கி பருகி தங்களின் 40 நாள் ஏக்கத்தை தீர்த்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story