ஊரடங்கில் தளர்வு: மும்பையில் மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம்


ஊரடங்கில் தளர்வு: மும்பையில் மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 4 May 2020 11:15 PM GMT (Updated: 4 May 2020 11:06 PM GMT)

ஊரடங்கின் தளர்வாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மும்பையில் அதிகாலையிலேயே திரண்ட குடிமகன்களால் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

மும்பை, 

கொரோனா ஊரடங்கால் விரக்தியின் உச்சத்துக்கே சென்றவர்கள் என்றால் மதுபிரியர்கள் தான். மதுக்கடைகள் மூடப்பட்டதால் திண்டாடிதான் போனார்கள். இதில் மது கிடைக்காமல் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளில் சிலர் தற்கொலை செய்த சம்பவங்களும் அரங்கேறின. தமிழகத்தில் போதைக்காக எதை எதையோ குடித்து சிலர் உயிரையும் விட்டனர்.

இந்தநிலையில் ஊரடங்கில் தளர்வாக நேற்று மாநிலம் முழுவதும் அத்தியாவசியம் இல்லாத பல்வேறு கடைகளை திறக்கவும் மாநில அரசு அனுமதி அளித்தது. இதில் மதுக்கடைகளும் அடங்கும்.

இதனால் மாநிலம் முழுவதும் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். அதன்படி கொரோனா பாதிப்புடன் ‘சீல்’ வைக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அதிகாலை 5 மணிக்கே மும்பையில் ஒரு சில இடங்களில் மதுக்கடைகள் முன் குடிமகன்கள் திரண்டனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நிற்கவும் தொடங்கினர். சில இடங்களில் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.

குடித்தே தீர வேண்டும்...

இதுகுறித்து லால்பாக் பகுதியில் மதுவாங்க நின்ற ஒருவர் கூறுகையில், “கடந்த 2 மாதமாக மது இல்லாமல் இருந்துவிட்டேன். எனவே மது குடித்தே தீர வேண்டும் என்ற ஆசையில் வந்து உள்ளேன். நேரம் ஆனால் கூட்டம் வந்துவிடும் என்பதால் அதிகாலையிலேயே எழுந்து வந்துவிட்டேன். கூட்டம் கூடி மது கிடைக்காமல் போய்விட்டால் ஏமாற்றம் ஆகிவிடும். எனவே ரிஸ்க் எடுக்க வேண்டாம் என சீக்கிரமாக வந்துவிட்டேன்” என்றார்.

கொரோனா ஊரடங்கால் உணவுக்காகவே பலர் அல்லல்படும் நிலையில், மதுபானம் வாங்க திரண்ட கூட்டத்தை பார்த்து சிலர் வேதனையும் தெரிவித்தனர்.

ஏமாற்றம்

எனினும் முறையான உத்தரவுகள் வராததால் பல இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. குறிப்பாக மாட்டுங்கா, தகிசர், சாந்தாகுருஸ், மால்வாணி, காந்திவிலியில் மதுக்கடைகள் பூட்டியே கிடந்தன.

இது குறித்து சாந்தாகுருசை சேர்ந்த மதுப்பிரியர் சூரன் பவார் கூறுகையில், முந்தைய நாள் இரவே நான் இங்கு வந்து விட்டேன். ஆனால் கடை திறக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளது. எவ்வளவு விலை என்றாலும் பரவாயில்லை. எங்களுக்கு மதுபானம் வேண்டும், என்றார்.

இதுபற்றி தகவல் அறிந்து அந்தந்த பகுதிகளுக்கு சென்ற போலீசார் திங்கட்கிழமை (நேற்று) சில பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்படாது என்று கூறி, அங்கு திரண்டிருந்தவர்களை வீட்டிற்கு செல்லும்படி அனுப்பி வைத்தனர். இதனால் குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மதியத்துக்கு பிறகு...

மாட்டுங்கா, காட்கோபர் உள்ளிட்ட இடங்களில் மதியத்துக்கு பிறகு சில மதுக்கடைகள் திறக்கப்பட்டன. எனினும் அங்கு கூட்டம் அலைமோதியதால் போலீசார் கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும் மதுக்கடைகள் முன் திரண்டு இருந்த மதுபிரியர்களை அங்கு இருந்து துரத்தினர்.

புனேயை பொறுத்தவரை கோத்ருட், சின்காட் சாலை, விஷ்ரந்த்வாடி, டெக்கான் பகுதிகளிலும் அதிகளவில் மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று கொண்டிருந்தனர். அங்கும் மதுக்கடைகள் திறக்கப்படாததால், திரண்டு வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். போலீஸ் துறையில் இருந்து தெளிவான உத்தரவு வராததால் மதுக்கடைகளை திறக்க முடியவில்லை என்று அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் மதுக்கடைகளை திறக்க அதன் உரிமையாளர்களுக்கு இன்றே(நேற்று) முறையாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என கலால் துறை கமிஷனர் கன்டில்லால் உமாப் கூறினார்.

இதற்கிடையே சோலாப்பூர், அவுரங்காபாத், ஜல்னா, புல்தானா, அமராவதி ஆகிய மாவட்டங்களில் வருகிற 17-ந் தேதி வரை மதுக்கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story