காஷ்மீரில் வீரமரணம் அடைந்த செங்கோட்டை சி.ஆர்.பி.எப். வீரரின் உடல் இன்று சொந்த ஊர் வருகிறது - அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடு


வீரமரணம் அடைந்த சந்திரசேகர் தனது மனைவி, குழந்தையுடன்
x
வீரமரணம் அடைந்த சந்திரசேகர் தனது மனைவி, குழந்தையுடன்
தினத்தந்தி 5 May 2020 11:15 PM GMT (Updated: 5 May 2020 5:26 PM GMT)

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த செங்கோட்டை சி.ஆர்.பி.எப். வீரரின் உடல் இன்று (புதன்கிழமை) அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

செங்கோட்டை, 

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வங்கம்-காசியாபாத் என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

அவர்களில் ஒருவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள மூன்று வாய்க்கால் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் (வயது 31) என்பது தெரியவந்தது. அவருடைய தந்தை பெயர் செல்லச்சாமி. முன்னாள் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் ஏற்கனவே இறந்து விட்டார்.

குடும்பம்

சந்திரசேகர் கடந்த 2014-ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். பணியில் சேர்ந்தார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் தான் காஷ்மீருக்கு சென்றார். இந்த நிலையில் அவர் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்து இருக் கிறார். சந்திரசேருக்கு ஜெனிபர் கிறிஸ்டி (28) என்ற மனைவியும், 1½ வயதில் ஜான் பீட்டர் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். ஜெனிபர் கிறிஸ்டி தனது குழந்தையுடன் திருச்சியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கணவர் இறந்த தகவல் கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவரை திருச்சியில் இருந்து கார் மூலம் செங்கோட்டை மூன்றுவாய்க்கால் கிராமத்தில் உள்ள அவருடைய கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவர் தனது கணவர் மறைவு குறித்து கண்ணீர் மல்க கூறியதாவது:-

நாட்டுப்பற்று

நான் கடந்த மாதம் திருச்சியில் உள்ள எனது பெற்றோர் வீட்டுக்கு சென்றேன். வழக்கமாக பணி இல்லாத நேரத்தில் எனது கணவர் என்னிடம் செல்போனில் பேசுவார். அதுபோல நேற்று மதியம் (அதாவது நேற்று முன்தினம்) என்னிடம் போனில் சாதாரணமாக பேசினார். இதுபோன்று எந்த தகவலும் என்னிடம் கூறவில்லை. அதன்பிறகு என்னிடம் அவர் பேசவில்லை. இரவு 10 மணிக்கு தான் எனது உறவினர்கள் என்னிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார்கள். முதலில் எனது கணவரின் காலில் அடிபட்டு இருப்பதாக தான் தெரிவித்தனர். ஆனால், ஊருக்கு செல்ல வாகனம் ஏற்பாடு செய்தபோது எனக்கு சந்தேகம் வந்து நான் கேட்டபோது தான், அவர் இறந்த தகவலை கூறினார்கள். நமது நாட்டின் மீது எனது கணவருக்கு அதிக பற்று உண்டு. அவர் அடிக்கடி என்னிடம் பணியில் இருக்கும்போது நான் இறக்க நேர்ந்தால் மிகுந்த சந்தோஷப்படுவேன் என்று கூறுவார். அவர் கூறியபடியே நடந்து விட்டது.

இவ்வாறு கூறிய அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

உடல் அடக்கம்

சந்திரசேகரின் உடல் இன்று (புதன்கிழமை) காலை அவரது சொந்த ஊரான மூன்றுவாய்க்கால் கிராமத்துக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அரசு மரியாதையுடன் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சந்திரசேகர் மறைவால் மூன்றுவாய்க்கால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Next Story