எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர்கள் உத்தவ் தாக்கரே, நீலம் கோரே


எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிடும் சிவசேனா வேட்பாளர்கள் உத்தவ் தாக்கரே, நீலம் கோரே
x
தினத்தந்தி 5 May 2020 11:20 PM GMT (Updated: 2020-05-06T04:50:30+05:30)

சிவசேனா எம்.எல்.சி. வேட்பாளர்களாக உத்தவ் தாக்கரே மற்றும் நீலம் கோரே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மும்பை, 

மராட்டியத்தில் காலியாக இருந்த 9 எம்.எல்.சி. பதவிகளுக்கு கடந்த 24-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. 

சட்டசபை மற்றும் மேல்-சபையில் உறுப்பினராக இல்லாத உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை இந்த தேர்தல் மூலம் தக்க வைத்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து, கவர்னர் ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள எம்.எல்.சி. பதவியில் உத்தவ் தாக்கரேயை நியமிக்க கோரி மாநில மந்திரிசபை 2 முறை கவர்னருக்கு பரிந்துரை செய்தது.

ஆனால் கவர்னர் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 9 எம்.எல்.சி. பதவிகளுக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து வருகிற 21-ந் தேதி அந்த பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

உத்தவ் தாக்கரே, நீலம் கோரே

இதன் மூலம் உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை காப்பாற்றி கொள்வதற்கு வழிபிறந்து உள்ளது. ஆளும் கூட்டணி சார்பில் 6 எம்.எல்.சி.க்களை தேர்வு செய்ய முடியும். இதில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் முறையே தலா 2 எம்.எல்.சி.க்கள் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.

இதில் சிவசேனா சார்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் தற்போதைய மேல்-சபை துணை தலைவர் நீலம்கோரே ஆகியோர் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

வருகிற 11-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். எனவே விரைவில் உத்தவ் தாக்கரே வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜனதா சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.


Next Story