சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள்


சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 7 May 2020 2:39 AM GMT (Updated: 7 May 2020 2:39 AM GMT)

சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வடமாநில தொழிலாளர்கள் வந்தனர்.

ஊட்டி,

ஊரடங்கு உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை எஸ்டேட்டுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்கள் வேலையிழந்து தங்கி இருக்கும் இடங்களிலேயே முடங்கி உள்ளனர். அவர்களை பணியில் அமர்த்திய நிறுவனங்கள் சரிவர உணவு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு வருவாய்த்துறையினர், தன்னார்வலர்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியதோடு, அவர்களை பஸ்களில் அனுப்பி வைக்குமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்களிடம் சொந்த ஊர் செல்ல விரும்புகிறவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் அலுவலகத்துக்கு...

இந்த நிலையில் நேற்று சொந்த ஊருக்கு செல்ல அனுமதி கேட்டு ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்று இருந்தனர். அவர்களிடம் உரிய அனுமதி வந்த பின்னர் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று ஒரு அதிகாரி கூறினார். இதையடுத்து போலீசார் தற்போது பஸ்கள் ஓடவில்லை, வெளியூர் செல்ல இ-பாஸ் பெற வேண்டும். எனவே எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அங்கே திரும்பி செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறும்போது, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 400 பேர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர். ஊரடங்கால் நாங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கி தவிக்கிறோம். இ-பாஸ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்தும், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரெயில்களில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். எங்களையும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story