சென்னையில் விபத்தில் பலியான பாவூர்சத்திரம் பெண் போலீஸ் உடல் தகனம் - அரசு மரியாதையுடன் நடந்தது


சென்னையில் விபத்தில் பலியான பாவூர்சத்திரம் பெண் போலீஸ் உடல் தகனம் - அரசு மரியாதையுடன் நடந்தது
x
தினத்தந்தி 7 May 2020 11:00 PM GMT (Updated: 7 May 2020 7:00 PM GMT)

சென்னையில் விபத்தில் பலியான பாவூர்சத்திரம் பெண் போலீஸ் உடல் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பாவூர்சத்திரம், 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலஅரியப்பபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் தற்போது குடும்பத்துடன் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் வசித்து வருகிறார். சரவணனின் மூத்த மகள் பவித்ரா (வயது 22). இவர் சென்னை ஆயுதப்படை பிரிவு போலீசில் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 5-ந்தேதி சென்னையில் நடந்த சாலை விபத்தில் பலியானார். அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

உடல் தகனம்

நேற்று காலை 6 மணியளவில் பவித்ரா உடல் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான மேலஅரியப்பபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன், நெல்லை ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன், பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தமிழரசன் ஆகியோர், பவித்ரா உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Next Story