மாவட்ட செய்திகள்

217 டாஸ்மாக் கடைகள் திறப்பு: பட்டாசு வெடித்து மதுபிரியர்கள் கொண்டாட்டம் - ‘கேக்’ வெட்டிய 3 பேர் கைது + "||" + 217 Task Shop Opening: Fireworks Explosion Brewers Celebration - 3 arrested for cutting cake

217 டாஸ்மாக் கடைகள் திறப்பு: பட்டாசு வெடித்து மதுபிரியர்கள் கொண்டாட்டம் - ‘கேக்’ வெட்டிய 3 பேர் கைது

217 டாஸ்மாக் கடைகள் திறப்பு: பட்டாசு வெடித்து மதுபிரியர்கள் கொண்டாட்டம் - ‘கேக்’ வெட்டிய 3 பேர் கைது
திருப்பூர் மாவட்டத்தில் 217 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சியில் திளைத்த மதுபிரியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். கேக் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், 

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் 238 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கொரோனா கட்டுப்பாட்டு பகுதியை தவிர மற்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 12 கடைகள், புறநகர் பகுதியில் 9 கடைகள் என 21 டாஸ் மாக் கடைகள் திறக்கப்படவில்லை. மீதம் உள்ள 217 கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைக்கு குடையுடன் வந்தால் தான் மதுபானம் கிடைக்கும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் மதுப்பிரியர்கள் குடையுடன் காலை 8 மணி முதல் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு வரிசையில் காத்திருந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு கட்டைகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த தடுப்புக்குள் குடைகளை மட்டும் வைத்து இடம் பிடித்து முன்கூட்டியே மதுபிரியர்கள் காத்திருந்தனர்.

அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தாராபுரம் ரோடு கோவில் வழி அருகே புது ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பு வந்த மதுபிரியர் ஒருவர், கடையை திறந்ததும் கடைக்கு முன்பு தான் பையில் கொண்டு வந்த மலர்களை தூவினார். மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட அவர் விற்பனையாளர், மதுபிரியர்கள், காவல் பணியில் இருந்த போலீசார் அனைவருக்கும் சாக்லெட் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறினார். பின்னர் 2 குவாட்டர் பாட்டில் மதுவை வாங்கிக்கொண்டு உற்சாகத்துடன் அங்கிருந்து புறப்பட்டார்.

முககவசம், குடை மற்றும் ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என்று ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளுக்கு முன்பும் அறிவிப்பு பதாகை தொங்கவிடப்பட்டு இருந்தன. குடையை ஏந்தியபடி தடுப்புக்குள் வரிசையில் காத்திருந்த மதுப்பிரியர்கள் ஆதார் அட்டையை காண்பித்து மதுவாங்கி சென்றார்கள். ஒருவருக்கு அதிபட்சமாக 4 குவாட்டர் அல்லது 2 ஆப் அல்லது 1 புல் என்ற அளவில் மது விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எம்.எஸ்.நகரில் ஒரு டாஸ்மாக் கடையை திறந்ததும், அங்கு வந்த மதுபிரியர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இது தொடர்பாக பிச்சம்பாளையம் புதுரை சேர்ந்த செல்லவேல்(வயது 55), முருகானந்தபுரத்தை சேர்ந்த சரவணன்(40), கணக்கம்பாளையம் பிரிவை சேர்ந்த அருண்(29) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வடக்கு போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பும் பட்டாசு வெடித்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது பிறந்தநாளுக்காக பட்டாசு வெடித்தோம் என்று கூறி அங்கிருந்து மாயமானார்கள்.

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து கலெக்டர் மாநகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அதுபோல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் லூர்துசாமி மற்றும் அதிகாரிகள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பெரும்பாலான கடைகளில் கூட்டம் அதிகமாக இல்லை.