தஞ்சையில், போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர்


தஞ்சையில், போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நீண்ட வரிசையில் நின்று  வாங்கிச்சென்றனர்
x
தினத்தந்தி 7 May 2020 11:02 PM GMT (Updated: 7 May 2020 11:02 PM GMT)

தஞ்சையில் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடந்தது. நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

தஞ்சாவூர், 

தஞ்சையில் போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடந்தது. நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

டாஸ்மாக் கடைகள் திறப்பு

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு 7-ந் தேதி முதல் டாஸ்மாக்கடைகளை திறக்க உத்தரவிட்டது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 100 டாஸ்மாக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. வழக்கமாக மதுக்கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும். ஆனால் நேற்று முதல் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

குடிமகன்கள் திரண்டனர்

அதன்படி காலை 10 மணிக்கு கடை திறக்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே குடிமகன்கள், கடை முன்பு திரண்டனர். சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் அவர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். டாஸ்மாக் கடைகள் முன்பு போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

ஏற்கனவே டாஸ்மாக்கடைகள் முன்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன. குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். ஒரு சில கடைகளில் ஒருவருக்கு 2 மதுபாட்டில்கள் மட்டும் வழங்கப்பட்டன. சில கடைகளில் கேட்ட மதுபாட்டில்கள் கிடைத்ததால் குடிமகன்கள் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்கடையில் டோக்கன் மூலம் மது விற்பனை செய்யப்பட்டது.

டோக்கன் முறை

குடிமகன்களுக்கு, டோக்கன்களை போலீசார் வழங்கினர். டோக்கனை பெற்றவர்கள் அவற்றை கடையில் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். டோக்கன் இல்லாதவர்களுக்கு மது வழங்கப்படவில்லை. அனைத்து டாஸ்மாக்கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. மேலும் கொரோனா தொற்று பாதித்த 10 இடங்களிலும் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டது.

தஞ்சை சுந்தரம் நகர் பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதால் சுற்றி 5 கி.மீ. தூரத்துக்கு டாஸ்மாக்கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் மதுபானக்கடைகள் திறக்கப்படாது என கூறப்பட்டது. ஆனால் தஞ்சை மாநகரில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டன. வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

2 கடைகள் திறக்க எதிர்ப்பு

டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தஞ்சை பூக்காரத்தெரு, அம்மாப்பேட்டை அருகே உள்ள செண்பகாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை.

மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் குடிமகன்கள் மது வாங்கிச்சென்றனர்.

Next Story