மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் தஞ்சை மாவட்டத்தில் நடந்தது


மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் தஞ்சை மாவட்டத்தில் நடந்தது
x
தினத்தந்தி 7 May 2020 11:50 PM GMT (Updated: 7 May 2020 11:50 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம், 

தஞ்சை மாவட்டத்தில் மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்

மதுக்கடைகள் திறந்ததை கண்டித்து கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் கோவில் சன்னதி தெருவில் நகர ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். அன்பழகன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் ராஜாராமன், நகர அவை தலைவர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி வாசுதேவன் மற்றும் 10 பெண்கள் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்டவர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து, கைகளில் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுக்கடையை உடனே மூடவேண்டும் என வலியுறுத்தி தி.மு.க.வினர் கோஷம் எழுப்பினர்.

இதேபோல் நகர காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவின் சார்பில் கும்பகோணத்தை அடுத்த அசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஓ.வி.கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் முரளிதரன், நகர தலைவர் மிர்சாவூதீன், ஒருங்கிணைப்பாளர் ஓ.வி.வெங்கடேஷ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பாலு மற்றும் மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கும்பகோணம் அருகே புளியம்பாடியில் மாவட்டக்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மதுக்கடைகளை திறந்ததை கண்டித்தும், அனைத்து குடும்பங்களுக்கும் தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வையும், அதன் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் வக்கீல் துளசி அய்யா தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மனோகரன், நகர அவை தலைவர் திம்மா.நாகராஜன், இந்திய மக்கள் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஏ.ஆர்.சேக் அலாவுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஒரத்தநாடு

ஒரத்தநாட்டில், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் மு.காந்தி தலைமையிலும், ஊரணிபுரத்தில், திருவோணம் ஒன்றிய தி.மு.க செயலாளர் மகேஷ்கிருஷ்ணசாமி தலைமையிலும் கருப்பு சின்னம் அணிந்து மதுக்கடை திறக்ககூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதேபோல் திராவிடர் கழகம், கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பிலும் ஒரத்தநாடு-திருவோணம் பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்தினர். பட்டுக்கோட்டை நகர தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்குமார் அவர் வீட்டு முன்பு கருப்புக்கொடி ஏற்றி கருப்பு சின்னம் அணிந்து மதுக்கடை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் அண்ணாதுரை தனது வீட்டு முன்பு கருப்புக்கொடி ஏற்றி கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்தினார். இதேபோல் பட்டுக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ரவிக்குமார், மாவட்ட துணை தலைவர் ராமசாமி ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு நகர செயலாளர் சுதாகர் தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கருப்பு சின்னம் அணிந்து கோஷம் எழுப்பினர். பட்டுக்கோட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கந்தசாமி, நகர ம.தி.மு.க. செயலாளர் செந்தில் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயபாரதி விசுவநாதன் ஆகியோர் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி கருப்பு சின்னம் அணிந்து போராட்டம் நடத்தினர்.

பேராவூரணி-திருப்பனந்தாள்

பேராவூரணியில் தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில், முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார், தி.மு.க. பேச்சாளர் அப்துல் மஜீத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர குழு உறுப்பினர் ஜகுபர்அலி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி இருந்தனர். இந்த பகுதியில் நீலப்புலிகள் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவிடைமருதூர்

அம்மாசத்திரம் மகாலட்சுமி நகரில் உள்ள தனது வீட்டின் முன்பு கோவி.செழியன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து சமூக இடைவெளியோடு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. ஒன்றிய அவைத் தலைவர் சிங்கை சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரில் பெரும்பாலான வீடுகளிலும் மதுக்கடை திறப்பை கண்டித்து கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. சீனிவாசநல்லூரில் உள்ள ராமலிங்கம் எம்.பி. தனது குடும்பத்தினருடன் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து சமூக இடைவெளியோடு நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யசோதா ராமலிங்கம் உள்பட குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் கும்பகோணம் ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் கருப்பு பேட்ஜ் அணிந்து தனது வீட்டு வாசல் முன்பு தனது குடும்பத்தினருடன் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் முன்னாள் தாராசுரம் பேரூராட்சி தலைவர் ரா.சரஸ்வதி அம்மாள், கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரா.அசோக்குமார், ஒன்றிய மாணவரணி துணை தலைவர் ஆர்.ஏ.சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story