வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து 900 பேர் வந்துள்ளனர்: குமரியில் கல்லூரி மாணவி உள்பட 8 பேருக்கு கொரோனா


வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து 900 பேர் வந்துள்ளனர்: குமரியில் கல்லூரி மாணவி உள்பட 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 May 2020 6:36 AM IST (Updated: 8 May 2020 6:36 AM IST)
t-max-icont-min-icon

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 900 பேர் வந்துள்ளனர். குமரியில் கல்லூரி மாணவி உள்பட 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில், 

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு 900 பேர் வந்துள்ளனர். குமரியில் கல்லூரி மாணவி உள்பட 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 இடங்களில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு மண்டலமாக மாற்றம்

நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை முடிந்து ஏற்கனவே வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 3 பேரும் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினர்.

குமரி மாவட்டத்தில் கடைசியாக கடந்த மாதம் (ஏப்ரல்) 14-ந் தேதி ஒரு பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு 18 நாட்களாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை. 14 நாட்கள் தொடர்ச்சியாக யாருக்கும் தொற்று ஏற்படாததால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருந்த குமரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டது.

900 பேர்

இந்தநிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் லேப்-டெக்னீசியன் அரசு வேலையில் சேருவதற்காக சென்னை சென்றார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சென்னையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. ஆனாலும் மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை. இதற்கிடையே வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து நேற்று வரை சுமார் 900 பேர் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு சளி, மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 500 பேருக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் குமரி மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்தனர்.

6 பேருக்கு கொரோனா

இதற்கிடையே மற்றவர்களுக்கு தொடர்ந்து நடந்த பரிசோதனையின் போது வெளியூர்களில் இருந்து வந்த 6 பேருக்கு ஒரே நாளில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் நாகர்கோவில் ராமன்புதூர் அருகே தளவாய்புரத்தை சேர்ந்த 26 வயது வாலிபர், வெட்டூர்ணிமடம் அருகே கேசவதிருப்பாபுரம் சந்தோம்நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர்,

தென்தாமரைக்குளத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, கல்லுக்கூட்டம் வேம்படிவிளையைச் சேர்ந்த 55 வயது ஆண் ஆகிய 4 பேர் ஆவர். மற்ற 2 பேர் கடலூர் மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 28 வயது வாலிபர், மற்றொருவர் கேரள மாநிலம் பாறசாலையை அடுத்து காரம்கோணம் மஞ்சுவிளாகம் பூவத்தூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஆகியோர் ஆவர்.

விவரங்கள் சேகரிப்பு

இவர்களில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அங்கு அரசு மருத்துவமனையிலும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 6 பேருடன் உடன் வந்தவர்கள் 15 பேருக்கு நடந்த பரிசோதனையில் அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த 6 பேரும் குமரி மாவட்டத்தின் எந்தெந்த பகுதிக்கு சென்று வந்தார்கள்? யார், யாருடன் பழகினார்கள்? என்பது குறித்து விவரங்களை சேகரிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

4 தடை செய்யப்பட்ட பகுதிகள்

குமரி மாவட்டத்தில் ஏற்கனவே நாகர்கோவிலில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டிப் பொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் நாகர்கோவிலில் தளவாய்புரம், வெட்டூர்ணிமடம் கேசவதிருப்பாபுரம் பகுதிகளும், தென்தாமரைக்குளம், கல்லுக்கூட்டம் வேம்படிவிளை பகுதியும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த 4 பகுதிகளிலும் போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் குவிக்கப்பட்டுள்ளனர்.

வீடு வீடாக ஆய்வு

இதனால் குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 8 ஆக உயர்ந்துள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வெளிநபர்கள் உள்ளே செல்லவும், அந்த பகுதியில் வசிக்கும் நபர்கள் அங்கிருந்து வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும், வீடு, வீடாக சென்று மக்களிடம் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா எனவும் சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வெளியூர்களில் இருந்து யாராவது வந்துள்ளனரா? என்பது குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

கல்லுக்கூட்டம் வேம்படிவிளை பகுதியில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் 2 பேர்

இதற்கிடையே நேற்று நள்ளிரவில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் எந்த ஊரென்று வெளியிடப்படவில்லை. இதன் மூலம் ஒரே நாளில் குமரியில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story