திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு தரப்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களால் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது.
நேற்று முன்தினம் நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 42 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 10 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு அருகே ரெட்டேரிபாளையத்தை சேர்ந்த 2 பேருக்கும், வந்தவாசி பதூர், செய்யாறு அருகே உள்ள நெமிலி, தெள்ளார் தென்வணக்கம்பாடி, சட்டுவன்தாங்கல், நார்த்தம்பூண்டி ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கழிக்குளத்தில் 4 பேருக்கும், நெடுங்காம்பூண்டியை சேர்ந்த 2 பேர் உள்பட 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story