கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்


கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 8 May 2020 4:13 AM GMT (Updated: 8 May 2020 4:13 AM GMT)

கரூர் மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் நேற்று மது வாங்க குவிந்த மதுப்பிரியர்கள். அப்போது சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

கரூர், 

கரூர் மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் நேற்று மது வாங்க குவிந்த மதுப்பிரியர்கள். அப்போது சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

மதுக்கடைகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்தநிலையில் சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 95 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான சின்னவரப்பாளையம் நன்னியூர்புதூரில் உள்ள ஒரு கடை மட்டும் நேற்று திறக்கப்படவில்லை. மீதமுள்ள 94 டாஸ்மாக் கடைகளும் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. இதனால் ஒரு சில கடைகள் முன்பு காலை 6 மணிக்கே மதுப்பிரியர்கள் குவிய தொடங்கினர். அனைத்து கடைகள் முன்பும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டிருந்தது. மேலும் தடுப்பு கம்புகள் நீண்டதூரம் அமைக்கப்பட்டிருந்தன.

நீண்ட வரிசையில்...

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை தொடங்கியது. கடந்த 45 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்ததால் அனைத்து கடைகளிலும் மது வாங்குவதற்காக மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் காத்திருந்து மது வாங்க வந்தவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வகைகளை வாங்கிச் சென்றனர். ஒரு சிலர் வீட்டிலிருந்து குடைகளையும், மது பாட்டில்கள் எடுத்து செல்ல பைகளையும் எடுத்து வந்திருந்தனர்.

டோக்கன்

ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் முன்பு ஊழியர்கள் நின்று கொண்டு மதுப்பிரியர்களின் கையில் சானிடைசர் ஊற்றி மது வாங்குமாறு அனுப்பி வைத்தனர்.

அதே சமயம் ஒரு சில இடங்களில் சமூக இடைவெளியை கடை பிடிக்காததால் அங்கு போலீசார் சென்று சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசையாக நிற்க வைத்து, ஆதார்கார்டு வைத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மதுவகைகள் விற்பனை செய்யப்பட்டது.

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரையிலும், காலை முதல் மாலை வரை காத்திருந்து மது வகைகளை வாங்கிச் சென்றார்கள்.

கரூர் மாவட்டத்தில், காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் இடைவிடாமல் மாலை 5 மணி வரையிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள், டாஸ்மாக் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா? என்றும், முக கவசம் அணிந்து வந்து இருக்கிறார்களா? என்றும் கண்காணித்தனர்.

Next Story