புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள்


புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 8 May 2020 10:35 AM IST (Updated: 8 May 2020 10:35 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

டாஸ்மாக் கடைகள் திறப்பு

தமிழகத்தில் ஊரடங்கையொட்டி மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 143 டாஸ்மாக் கடைகள் உள்ளன. புதுக்கோட்டை மற்றும் அரிமளம் பகுதியில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அந்த பகுதியை சுற்றியுள்ள 15 கடைகள் திறக்கப்படவில்லை. இதில் புதுக்கோட்டை நகரில் 13 கடைகளும், அரிமளம் பகுதியில் 2 கடைகளும் திறக்கப்படவில்லை.

மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதலே மதுப்பிரியர்கள் கடைகளுக்கு முன்பு கூடி சமூக இடைவெளியை கடைபிடித்தும் கையில் குடைபிடித்தபடியும் வரிசையில் நின்றனர். பின் அரசு தெரிவித்த அடையாள அட்டைகளை காண்பித்து மது வாங்கி சென்றனர். ஒருவருக்கு 4 குவார்ட்டர் பாட்டில்கள் அல்லது 2 ஆப் பாட்டில்கள் அல்லது ஒரு புல் பாட்டில் அல்லது 4 பீர்கள் வழங்கப் பட்டது.

தற்போது தமிழக அரசு மதுபானங்களின் விலையை 15 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் மதுபானங்களின் விலை ரூ.10-ல் இருந்து ரூ.20 வரை கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் மதுபானங்களை வாங்கி சென்றனர். மேலும் மதுபான கடைகளில் எந்த அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சூடம்ஏற்றிய மதுப்பிரியர்கள்

புதுக்கோட்டை நகர் பகுதியில் கடைகள் திறக்கப் படவில்லை என்பது தெரியாமல் பலர் அந்த கடைகளுக்கு வந்து பார்த்து ஏமாந்து சென்றனர். புதுக்கோட்டை டவுன் பகுதியில் எந்த கடையும் திறக்கப்படாததால் இங்குள்ள மதுப்பிரியர்கள் முத்துடையான்பட்டி, குமரமலை, புத்தாம்பூர், திருமயம் போன்ற பகுதிகளுக்கு சென்று மது வாங்கினர். இதனால் புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைகளில் பகல் 2 மணி அளவில் மதுபானம் தீர்ந்துவிட்டதால் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். குமரமலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காலை 6 மணிக்கு முன்பாகவே மதுப்பிரியர்கள் வந்து காத்து இருந்து கடை திறந்ததும் மதுவாங்கி சென்றனர். இந்தநிலையில் சில மதுப்பிரியர்கள் கடை திறந்ததும் சூடம் ஏற்றி சாமிகும்பிட்டு தங்களின் நன்றியை தெரிவித்தனர். ஜெகதாப்பட்டினம், ஆலங்குடியில் மதுப்பிரியர்கள் குடையுடன் வந்து காத்து இருந்து மதுவாங்கி சென்றனர். பொன்னமராவதி அருகே நகரப்பட்டியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்ற மதுப்பிரியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

Next Story