மாவட்ட செய்திகள்

சிங்கப்பூர் தோழி மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவிய ஆசிரியை: திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம் + "||" + A teacher who helped poor students through a friend in Singapore: incident in Tirupur

சிங்கப்பூர் தோழி மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவிய ஆசிரியை: திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்

சிங்கப்பூர் தோழி மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவிய ஆசிரியை: திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்
சிங்கப்பூர் தோழி மூலம் உதவி பெற்று ஏழை மாணவர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியை உதவிய சம்பவம் திருப்பூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், நாடு விட்டு நாடு கடந்த மனிதாபிமானமாக கருதப்படுகிறது.
அனுப்பர்பாளையம்,

கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது உலகம் முழுவதும் இருந்தாலும் இந்தியாவில் தொழில்நகரமான திருப்பூரில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னலாடை தொழில் முற்றிலுமாக முடங்கிய நிலையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஏழை மற்றும் நடுத்தர மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டு விட்ட நிலையிலும் காலை, மதியம், மாலை என 3 நேரமும் இலவச உணவுக்காக சாலையோரம் நூற்றுக்கணக்கானோர் காத்திருப்பதை இன்றும் திருப்பூரில் காண முடிகிறது.

தமிழக அரசு மட்டுமின்றி, பல்வேறு கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஏழை மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ-மாணவிகளுக்கு அந்த பள்ளியின் ஆசிரியை ஒருவர் நாடு விட்டு நாடு தாண்டி உதவி கேட்டு தன்னுடைய மாணவர்களுக்கு உதவி செய்துள்ளார். இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

திருப்பூர் காதர்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் விசாலாட்சி. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மிகவும் அடித்தட்டு மாணவர்களின் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஆசிரியை விசாலாட்சிக்கு ஏற்பட்டது. ஆனால் அவரிடம் போதுமான பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் சிங்கப்பூரில் உள்ள அவருடைய தோழியான கங்கா என்பவரிடம் உதவியை நாடி உள்ளார்.

தனது பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் குடும்பத்திற்கு உணவு பொருட்கள் வாங்க முடிந்த நிதி உதவி செய்யுமாறு கேட்டுள்ளார். இதையடுத்து அவருடைய தோழியான கங்கா இந்த தகவலை உலக வாழ் தமிழர்கள் அனைவரும் இருக்கும் வலசை என்ற வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளார். உடனடியாக அந்த குழுவில் இருந்த தமிழர்கள் திருப்பூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவ ரூ.50 ஆயிரம் வழங்க முன்வந்ததுடன், இந்த தகவலை திருப்பூர் ஆசிரியை விசாலாட்சியிடம் தெரிவித்தனர். ஆனால் விசாலாட்சி அந்த தொகையை எனது வங்கி கணக்கிற்கு அனுப்பாமல் திருப்பூரில் உள்ள ஒரு பெரிய மளிகை கடையின் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து ஆசிரியை விசாலாட்சி அந்த கடையில் இருந்து அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், பிஸ்கட், சோப்பு உள்ளிட்ட பல்வேறு மளிகை மற்றும் உணவு பொருட்களை ரூ.50 ஆயிரத்திற்கு வாங்கினார். பின்னர் அந்த பொருட்களை தனது பள்ளியில் படிக்கும் சின்னாநகர், சூசையாபுரம், அணைமேடு, ஆலங்காடு, கருவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 53 ஏழை மாணவர்களின் குடும்பங்களுக்கு அவர் வழங்கினார்.

இதேபோல் பார்வையற்றோர், மனநலம் பாதித்தவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கும் உணவு மற்றும் மளிகை பொருட்களை ஆசிரியை விசாலாட்சி, ஆசிரியரான தனது கணவருடன் வழங்கி உள்ளார். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்ற வாசகம் ஒருபுறம் இருந்தாலும், சட்டியில் இல்லாமல் இருந்தாலும் உதவ முடியும் என்ற வார்த்தைக்கேற்ப நாடு விட்டு நாடு கடந்து உதவியை கேட்டு தனது பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு திருப்பூர் ஆசிரியை உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், நாடு விட்டு நாடு கடந்த மனிதாபிமானமாக கருதப்படுகிறது.