மும்பைக்கு ராணுவம் வருகை? - உத்தவ் தாக்கரே கருத்தால் பரபரப்பு


மும்பைக்கு ராணுவம் வருகை? - உத்தவ் தாக்கரே கருத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 May 2020 11:35 PM GMT (Updated: 8 May 2020 11:35 PM GMT)

மும்பைக்கு ராணுவம் வருவது குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கருத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை, 

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பெருநகரமாக மும்பை உருவெடுத்து உள்ளது. 

இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கி விட்டது. ஊரடங்கு பாதுகாப்பு மற்றும் கொரோனா தடுப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அவர்களையும் கொரோனா தொற்றி கொண்டு உள்ளது.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று கூறுகையில், “தேவைப்பட்டால், இங்குள்ள போலீஸ் துறையினரை ஒரு கட்டமாக ஓய்வெடுக்க ஏதுவாக, மத்திய அரசிடம் கூடுதல் மனிதவளத்தை தனது அரசாங்கம் கேட்கலாம்” என்று கூறியிருந்தார்.

“இதற்காக மும்பை ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்று அர்த்தம் அல்ல. போலீஸ் துறையினர் சோர்வாக இருக்கிறார்கள், சிலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர், அவர்களில் சிலர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஓய்வு தேவை” என்றும் அவர் கூறினார்.

பரபரப்பு

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனாவின் கருமேகத்தால் சூழ்ந்துள்ள மும்பை ராணுவ கட்டுப்பாட்டில் வருகிறதா? என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிடம் கேட்டதற்கு, மும்பைக்கு ராணுவம் வருகிறது என்பது உண்மை அல்ல. அது வதந்தி. இங்குள்ள போலீசார் நிலைமையை கையாள திறமைவாய்ந்தவர்கள் என்று பதிலளித்தார்.

Next Story