அதிகாரிகளுக்கு தொல்லை: கவர்னர் கிரண்பெடியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் நாராயணசாமி ஆவேசம்


அதிகாரிகளுக்கு தொல்லை: கவர்னர் கிரண்பெடியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் நாராயணசாமி ஆவேசம்
x
தினத்தந்தி 9 May 2020 5:16 AM IST (Updated: 9 May 2020 5:16 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகளுக்கு தொல்லை கொடுக்கும் கவர்னரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து புதுவையில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி அளித்து உள்ளோம். காய்கறி, மளிகை கடை தவிர மற்ற கடைகளை காலை 10 மணிக்கு மேல் திறக்க அமைச்சரவையில் முடிவு செய்துள்ளோம். பிற மாநிலங்களுக்கு செல்ல விரும்புவோருக்கு அனுமதி கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகளை திறப்பது சம்பந்தமாக அமைச்சரவையில் முடிவு செய்து அறிவிக்க ஏற்பாடு செய்துள்ளோம். இன்று (சனிக்கிழமை) மாலை அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. பல மாநிலங்களில் மது பானங்கள் மீது கொரோனா நிவாரணத்துக்கு கூடுதலாக வரி விதித்து உள்ளனர். இது தொடர்பாக நாங்களும் ஆலோசித்து முடிவு செய்வோம்.

சி.பி.ஐ.க்கு புகார்

கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது மட்டுமல்லாமல் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்படுகிறார். இதுதொடர்பாக பிரதமர், உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். கவர்னர் தொடர்ந்து பல புகார்களை சி.பி.ஐ.க்கு அனுப்பி வருகிறார். அவர் சென்டாக் மாணவர் சேர்க்கையில் ஊழல் என்றார். இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு புகார் அனுப்பினார். இதனால் அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர். ஆனால் சி.பி.ஐ. விசாரித்து, முடிவில் அதிகாரிகளுக்கு அதில் எந்தவித தொடர்பும் இல்லை என்று வழக்கினை கைவிட்டது.

கவர்னர் கிரண்பெடி சி.பி.ஐ.க்கு 30-க்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பி உள்ளார். ஆனால் அதற்கு எந்தவித ஆதாரமுமில்லை. அரசின் மீது களங்கம் கற்பிக்கவே அவர் இவ்வாறு செயல்படுகிறார்.

அதிகாரிகளுக்கு தொல்லை

மதுக்கடைகள் தொடர்பாக தலைமைச்செயலாளருக்கு நான் தெள்ளத்தெளிவாக உத்தரவு பிறப்பித்து உள்ளேன். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளேன். அதே நேரத்தில் தவறு செய்யாதவர்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

ஊரடங்கால் மதுக்கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால் சரக்கு இருப்பு குறித்த விவரங்களை உடனே தர முடியாது, அதற்கு உரிய கால அவகாசம் கொடுத்தால் கொண்டுவந்து தர தயார் என்று மதுக்கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர். கவர்னரின் தூண்டுதலின் பேரில் சில மதுக்கடைகளின் உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதிகாரம் இல்லாமல் தலையிட்டு அதிகாரிகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்.

சி.பி.ஐ.க்கு புகார் கொடுத்த கவர்னரிடம் தான் முதலில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அதிகாரிகளை மிரட்டத்தான் சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இது கவர்னரின் வேலை அல்ல, தவறு செய்தால் கலால் துறை நடவடிக்கை எடுக்கும். அதற்கும் கவர்னருக்கும் என்ன சம்பந்தம்? சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளது என்கிறார். அவர்கள் முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கவர்னர் ஏன் தன் தகுதிக்கு, பதவிக்கு ஏற்காத காரியத்தை செய்கிறார்? இதன் உள்நோக்கம் என்ன?

விவரம் தெரியாமல் செயல்படுகிறார்

30 வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி அதிகாரிகளின் நேரத்தை வீணடித்து அவர்களை திசை திருப்புகிறார். இது கண்டனத்துக்குரியது. நாங்கள் மக்களுக்கு பணி செய்ய வந்துள்ளோம். ஆனால் கவர்னர் மக்களுக்கு துரோகம் செய்கிறார். மக்கள் நலத்திட்டங்களை கொடுப்பதுதான் அவரது வேலை. நான் சி.பி.ஐ. அமைச்சராக இருந்தவன். எனவே சி.பி.ஐ. நடவடிக்கைகள் எனக்கு தெரியும். இதுவரை நான் பேசாமல் இருந்தேன், இனியும் பேசாமல் இருப்பது நல்லதாக இருக்காது. கவர்னர் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளவேண்டும்.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்து மக்களை பார்க்காமல், விவரம் தெரியாமல் கவர்னர் கிரண்பெடி செயல்படுகிறார். அதை அவர் முழுமையாக நிறுத்தி விட்டு அரசோடு இணைந்து செயல்படவேண்டும். பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும். மத்திய மந்திரியாக இருந்து இதையெல்லாம் பார்த்துவிட்டு தான் நான் இங்கு வந்துள்ளேன். கவர்னர் கிரண்பெடி தானே சி.பி.ஐ.யை தொடர்புகொண்டு வழக்கு போட சொல்வது சரியானதல்ல. இது சம்பந்தமாக முழுமையான அறிக்கையோடு பிரதமர், உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுத உள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story