தேனி மாவட்டத்தில், மதுக்கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - 4 இடங்களில் நடந்தது


தேனி மாவட்டத்தில், மதுக்கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் - 4 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 9 May 2020 7:51 AM GMT (Updated: 9 May 2020 7:51 AM GMT)

தேனி மாவட்டத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி 4 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

தேனி, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று அபாயம் உள்ள நிலையில் மதுக்கடைகளை திறக்க பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் ‘குடி’மகன்களின் அணிவகுப்பால் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை களைகட்டியது.

இந்த நிலையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி அருகே கொடுவிலார்பட்டி, கோடாங்கிபட்டி, போடி அருகே சில்லமரத்துப்பட்டி, உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டி ஆகிய 4 இடங்களில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கொடுவிலார்பட்டியில் ஏராளமான பெண்கள் மதுக்கடைக்கு செல்லும் சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்துமேரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் பல்வேறு ஊர்களில் இருந்தும் இங்கு மதுபானம் வாங்க வருவதால் தங்கள் ஊரில் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், இங்குள்ள 2 மதுக்கடைகளையும் உடனே மூட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர், பெண்கள் சிலர் மட்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

இதே போல் கோடாங்கிபட்டியிலும் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலையில் திரண்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். சில்லமரத்துப்பட்டியில் மதுக்கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

பல்லவராயன்பட்டியில் காலை 9 மணியளவில் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு செல்லும் சாலையில் பொதுமக்கள் திரண்டனர். அதையடுத்து மதுக்கடையை திறக்கக்கூடாது என்று கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பொது மக்களின் இந்த போராட்டம் காரணமாக பல்லவராயன்பட்டியில் காலை 10 மணிக்கு திறக்க வேண்டிய கடை ஒரு மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது. மக்கள் போராட்டம் நடத்தியபோதிலும் மதுக்கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டு தொடர்ந்து மதுவிற்பனை நடந்தது.

Next Story