பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை முட்புதரில் வீச்சு: கல் மனம் படைத்த தாய் யார்? போலீசார் விசாரணை
கோபி அருகே பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை முட்புதரில் வீசப்பட்டது. வீசிச்சென்ற கல் மனம் படைத்த தாய் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24). இவர் நேற்று இரவு 7.15 மணி அளவில் கோபி நாகர்பாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முட்புதரில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. உடனே அவர் குழந்தை அழும் சத்தம் வந்த முட்புதரை நோக்கி சென்றார்.
அப்போது அங்கு பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையானது துணியால் சுற்றப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த குழந்தையின் தொப்புள் கொடி அறுக்கப்படாமல் இருந்ததையும் அவர் பார்த்தார். குழந்தையை யாரோ பெண் ஒருவர் முட்புதரில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது.
உடனே அவர் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. பின்னர் அந்த குழந்தையை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அந்த குழந்தையின் உடலை மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது.
இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டது. அங்கு அந்த குழந்தை டாக்டர்களின் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இதுபற்றி அறிந்ததும் கோபி போலீசார் விரைந்து சென்று குழந்தையை பார்வையிட்டனர். குழந்தையை இல்லாமல் பரிதவித்துக்கொண்டிருக்க பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற கல் மனம் படைத்த தாய் யார்? முறை தவறி பிறந்ததால் அந்த குழந்தையை வீசி சென்றாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story