பனியன் தொழிற்சாலைக்குள் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்: அதிகாரியை தாக்க முயன்றதால் பரபரப்பு
ஊத்துக்குளி அருகே பனியன் தொழிற்சாலைக்குள் வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரியை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்துக்குளி,
ஊத்துக்குளி-விஜயமங்கலம் சாலையில் தளவாய்பாளையம் பகுதியில் அகில் என்ற பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஒடிசாவை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 600 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது ஊரடங்கு காரணமாக விடுதியில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு பொருட்கள், நிவாரண பொருட்களை நிர்வாகம் வழங்கி வந்தது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு 50 சதவீத ஊழியர்களுடன் பனியன் நிறுவனங்கள் இயங்க தொடங்கின.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். தொழிற்சாலை நிர்வாகமும், அரசு அனுமதித்த பிறகு சொந்த ஊருக்கு செல்லலாம் என அறிவுரை கூறி வந்தது. இந்த நிலையில் நேற்று வடமாநில தொழிலாளர்கள் திரண்டு தொழிற்சாலை வளாகத்திற்குள் தங்களை ரெயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி அறிந்ததும் ஊத்துக்குளியை சேர்ந்த பனியன் நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் சக்திவேல்(வயது 38), அங்கு வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வடமாநில தொழிலாளர்கள் சிலர் அங்கு திரண்டு அவரை தாக்க முயன்றனர். உடனே பணியில் இருந்த காவலாளிகள், சக்திவேலை மீட்டு இது குறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வாடகை வேன், பஸ்களில் தங்கள் சொந்த செலவில் ஒடிசாவுக்கு செல்லலாம். அதற்கு ஒரு ஆளுக்கு ரூ.6 ஆயிரம் ஆகும். இல்லையென்றால் மாவட்ட நிர்வாகம் ரெயில் விட ஏற்பாடு செய்யும். அதுவரை பொறுமை காக்குமாறு வலியுறுத்தினார். ஒடிசா தொழிலாளர்களும் ரெயிலில் தான் செல்வோம் என்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story