கொரோனா நோயாளி குணமடைந்ததால் கட்டுப்பாட்டு பகுதியை திறக்கக்கோரி பொதுமக்கள் தர்ணா


கொரோனா நோயாளி குணமடைந்ததால் கட்டுப்பாட்டு பகுதியை திறக்கக்கோரி பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 10 May 2020 4:25 AM IST (Updated: 10 May 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளி குணமடைந்ததால் அரியாங்குப்பத்தில் கட்டுப்பாட்டு பகுதியை திறக்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் சொர்ணா நகரை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சொர்ணாநகர், அம்பேத்கர் நகர், கோட்டைமேடு, பி.சி.பி.நகர், காலாந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கொரோனாவால் பாதித்த 3 பேரில் 2 பேர் குணமடைந்தனர். ஒருவர் மட்டும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்ததால் அந்த பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமல் இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சிகிச்சையில் உள்ள இப்பகுதியை சேர்ந்த ஒருவரும் குணமடைந்துவிட்டால், மத்திய அரசின் ஆணைப்படி சீல் வைக்கப்பட்ட பகுதி திறந்துவிடப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

தர்ணா

இந்த நிலையில் நேற்று முன்தினம், சிகிச்சையில் இருந்த நபருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் சீல் வைக்கப்பட்ட பகுதிகள் திறக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் அரியாங்குப்பம் கோட்டைமேடு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு பகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் தொகுதி செயலாளர் பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி தலைமையில் நேற்று காலை 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள், கட்டுப்பாடுகளால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசு சார்பில் இந்த பகுதி மக்களுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும், தடுப்புகளை அகற்றி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தாசில்தார் ராஜேஷ் கண்ணா, அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் ஆகியோர் அங்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருசில நாட்களில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. அதில் இந்த பகுதியில் கட்டுப்பாடுகளை அகற்றுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

Next Story