கொரோனா பாதிப்பு எதிரொலி: நாளை முதல் ஒரு வாரம் நவிமும்பை மார்க்கெட் மூடப்படுகிறது


கொரோனா பாதிப்பு எதிரொலி: நாளை முதல் ஒரு வாரம் நவிமும்பை மார்க்கெட் மூடப்படுகிறது
x
தினத்தந்தி 10 May 2020 5:01 AM IST (Updated: 10 May 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலியாக நாளை முதல் ஒரு வாரம் நவிமும்பை ஏ.பி.எம்.சி. மார்க்கெட் மூடப்படுகிறது. இதனால் மும்பை, நவிமும்பையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மும்பை, 

நவிமும்பை வாஷியில் பரந்து விரிந்து காணப்படுகிறது, வேளாண் உற்பத்தி சந்தைக்குழு (ஏ.பி.எம்.சி.) மார்க்கெட். இது நாட்டில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று.

இந்த மொத்த மார்க்கெட்டில் இருந்து தான் மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு காய்கறிகள், பழங்கள், மசாலா பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.

மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களில் கொரோனா வைரஸ் தனது கோரப்பிடியை இறுக்கிய நிலையில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் திடீரென மூடப்பட்டது.

அப்போது வியாபாரிகளுடன் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டின் நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி திறக்க செய்தனர்.

அடுத்த சில நாட்களில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் வியாபாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மார்க்கெட்டின் ஒரு பகுதி அதிரடியாக மூடப்பட்டது. ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டின் மற்ற பகுதிகளில் சமூக விலகலை பின்பற்றுவதற்காக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

இருப்பினும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மும்பையில் இருந்து காய்கறிகள் வாங்குவதற்காக வியாபாரிகள் அதிகளவில் சென்று வந்தனர். இதனால் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக நவிமும்பை மேயர் ஜெயவந்த் சுதார் எச்சரித்தார்.

ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டை மூட வேண்டும் என அவர் கடந்த வியாழக்கிழமை வலியுறுத்தினார்.

202 பேருக்கு கொரோனா

இந்நிலையில், நேற்றுமுன்தினம் வரை ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் மார்க்கெட் ஊழியர்கள் என 85 பேருக்கும் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 117 பேருக்கும் என மொத்தம் 202 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதனால் ஏ.பி.எம்.சி. நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு வாரம் மூடல்

இதையடுத்து நவிமும்பை ஏ.பி.எம்.சி. மார்க்கெட் நாளை (திங்கட்கிழமை) முதல் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வரும் வருகிற 17-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மராட்டிய அரசின் சந்தைபடுத்துதல் கூடுதல் செயலாளர் அனுப்குமார், ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால், மாத்தாடி தலைவர் நரேந்திர பாட்டீல், மார்க்கெட் நிர்வாகிகள், நவிமும்பை மாநகராட்சி கமிஷனர் அன்னாசாகேப் மிசால் மற்றும் கொங்கன் மண்டல கமிஷனர் சிவாஜி தவுந்த் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஏ.பி.எம்.சி. மார்க்கெட் முழுவதுமாக ஒரு வாரத்திற்கு மூடப்படுவதால் மும்பை, நவிமும்பை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே வாஷி மார்க்கெட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் மார்க்கெட் மூடப்படும் காலத்தில் அங்கு கிருமிநாசினி தெளித்து தூய்மை செய்யும் பணி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கொரோனா வைரஸ் விசுவரூபம் எடுத்த நிலையில், நவிமும்பை வாஷி மார்க்கெட்டுக்கும் அந்த கதி ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மராட்டிய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

Next Story