சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆந்திர மாநில தொழிலாளர்கள் தவிப்பு


சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆந்திர மாநில தொழிலாளர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 10 May 2020 3:51 AM GMT (Updated: 10 May 2020 3:51 AM GMT)

கெலமங்கலத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஆந்திர மாநில தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

வேப்பனப்பள்ளி,

ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் கெலமங்கலத்தில் இருந்து நடந்தே ஆந்திர மாநிலத்திற்கு புறப்பட்டனர்.

வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் அம்மாநில போலீசார் இவர்களை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் அவர்களை வேலைக்கு அழைத்த ஒப்பந்ததாரரை வந்து அழைத்து செல்லுமாறு போலீசார் கூறினார்கள்.

தவிப்பு

இதைத் தொடர்ந்து ஒப்பந்ததாரர் தொழிலாளர்களை சூளகிரிக்கு நடந்து வரும்படி கூறினார். இதனால் கூலித்தொழிலாளர்கள் 10 பேரும் சூளகிரிக்கு நடந்தே சென்றனர். கடந்த 10 நாட்களாக அவர்கள் எங்கு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் சாலைகளில் அங்கும், இங்குமாக சுற்றித்திரியும் சம்பவம் காண்போரை பரிதாபப்பட வைத்துள்ளது.

Next Story