பல்லாவரத்தில் கவுன்சிலர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு


பல்லாவரத்தில் கவுன்சிலர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

சென்னை புறநகர் பகுதியில் நேற்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பல்லாவரத்தில் கவுன்சிலர் உள்பட 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தாம்பரம், 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த மேற்கு தாம்பரம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 51 வயது முதியவருக்கு கடந்த 8-ந் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அவருடைய மனைவி, மகன்கள் உட்பட வீட்டில் இருந்த 6 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் அனைவருக்கும் நேற்று வைரஸ் தொற்று உறுதியானது.

அதேபோல சேலையூர், ஈஸ்வரி நகர் விரிவு பகுதியை சேர்ந்த 38 வயது ஆண், கிழக்கு தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 26 வயது பெண், மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், பகுதியைச் சேர்ந்த 35 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் உறுதியானது.

ஆலந்தூர்

ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், மீனம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கத்தில் பொதுப்பணி துறை ஊழியர் குடும்பத்தில் 5 பேருக்கும், பிற பகுதிகளில் 9 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கிண்டி மடுவின்கரை பகுதியில் காய்கறி கடை நடத்திய வியாபாரி அவரது குடும்பத்தினர் 5 பேர் என கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பல்லாவரம்

பல்லாவரம் நகராட்சியில் நேற்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 6 பேர் காய்கறி வியாபாரிகள் ஆவர். இவர்கள், பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் இவர்களுடன் சேர்த்து இதுவரை 8 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் கவுன்சிலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Next Story