திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் 3,572 பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு: கலெக்டர் தகவல்


திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் 3,572 பேர் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு: கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 May 2020 11:00 PM GMT (Updated: 12 May 2020 8:54 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இதுவரை வெளி மாநிலத்தவர்கள் 3 ஆயிரத்து 572 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறினார்.

திருப்பூர், 

திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பித்து இருந்தனர். ஏற்கனவே திருப்பூரில் இருந்து பீகார் மாநிலத்துக்கு ஒரு சிறப்பு ரெயில் இயங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பீகார் மாநிலத்துக்கு 2-வது ரெயில் இயக்கப்பட்டது.

திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் இந்த சிறப்பு ரெயில் புறப்பட்டு சென்றது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ரெயில் நிலையத்துக்கு வந்து தொழிலாளர்களுக்கு கையசைத்தும், வணங்கியும் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார். முன்னதாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதை கலெக்டர் ஆய்வு செய்தார். மண்ணரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 200 மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு தனியார் பங்களிப்புடன் அத்தியாவசிய பொருட்களை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பித்தனர். அவ்வாறு 10 ஆயிரத்து 400 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் முதல்கட்டமாக பீகார் மாநிலம் முஜாப்பூர்நகருக்கு முதல் சிறப்பு ரெயில் திருப்பூரில் இருந்து இயக்கப்பட்டது. அந்த ரெயிலில் 1,140 பேர் புறப்பட்டு பீகார் சென்று சேர்ந்துள்ளனர். அதற்கு அடுத்ததாக பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அவசரமாக சொந்த ஊர் செல்ல வேண்டி விண்ணப்பித்த 720 வெளிமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுதவிர சிக்கிம், மிசோரம், மேகாலயா போன்ற மாநிலங்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. அதனால் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 248 பேர் சென்னைக்கு வாகனங்களில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 2-வது ரெயில் இன்று (நேற்று) பீகார் மாநிலம் ஹாஜிப்பூர் நகருக்கு இயக்கப்பட்டது. இதில் 1,464 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். வடமாநிலத்தவர்கள் இதுவரை 3 ஆயிரத்து 572 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வரும் நாட்களில் ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு திருப்பூரில் இருந்து சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே இணையதளம் மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பணி சுமூகமாக நடந்துள்ளது. இதற்காக அனைத்து அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போதைய நிலையில் தொழில் நிறுவனங்கள் 30 சதவீதம் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. விரைவில் 50 சதவீதத்தை எட்டும். இணையதளம் மூலமாக விண்ணப்பித்தவர்களில் பல வெளி மாநிலத்தவர்கள், தாங்கள் தொழில் நிறுவனங்களில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களின் விருப்பப்படி இங்கு பணியாற்றலாம். சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் மட்டுமே இங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சொந்த ஊர் புறப்பட்டவர்களும், தங்களது குடும்பத்தினரை சந்தித்து விட்டு விரைவில் திருப்பூர் திரும்புவதாக தெரிவித்து விட்டு சென்றிருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து 21 நாட்கள் யாருக்கும் தொற்று கண்டறியப்படாவிட்டால் பச்சை மண்டலத்துக்கு மாற முடியும். கடைசியாக கடந்த 2-ந் தேதி கொரோனா தொற்றால் 2 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களும் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதே நிலை நீடிக்க வேண்டும். மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதி 32 இருந்தன. அந்த பகுதியில் தொற்று ஏற்பட்டு 28 நாட்கள் வேறு யாருக்கும் புதிய தொற்று ஏற்படாவிட்டால் கட்டுப்பாடுகளை தளர்வு செய்து அகற்றப்படும்.

இன்று(நேற்று) வரை 17 கட்டுப்பாட்டு பகுதிகள் தளர்வு செய்யப்பட்டு அகற்றப்பட்டு விட்டது. இதே நிலை நீடித்தால் வருகிற 16-ந் தேதியன்று மாவட்டத்தில் 2 கட்டுப்பாட்டு பகுதி மட்டுமே இருக்கும். மற்றவை அனைத்தும் தளர்த்தப்பட்டு தடுப்புகள் அகற்றப்படும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முககவசம் அணிந்து செல்லுங்கள். காய்கறி மார்க்கெட்டுக்கு செல்லும்போது குடையுடன் செல்லுங்கள். கொரோனா தடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story