மடிக்கணினி வாங்க சேமித்த பணத்தில் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் 3-ம் வகுப்பு மாணவிக்கு கலெக்டர் பாராட்டு


மடிக்கணினி வாங்க சேமித்த பணத்தில் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் 3-ம் வகுப்பு மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 15 May 2020 7:22 AM IST (Updated: 15 May 2020 7:22 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மடிக்கணினி வாங்க சேமித்த பணத்தில் 3-ம் வகுப்பு மாணவி நிவாரண பொருட்கள் வாங்கி கொடுத்தாள். அந்த மாணவியை தனது இருக்கையில் அமர வைத்து கலெக்டர் பாராட்டினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன், தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி வித்யா. இவர்களது மகள் தியா (வயது 9). தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறாள். உயர் கல்வி படிக்க விரும்புவதால் அதற்கு மடிக்கணினி அவசியம் என்பதால் அதை வாங்குவதற்காக பெற்றோர் தனக்கு தந்த பாக்கெட் மணியை மாணவி தியா உண்டியலில் சேகரித்து வந்தாள். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளால் அன்றாடம் தொழில் செய்து பிழைப்பு நடத்திய தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதை அறிந்து மாணவி தியா வேதனை அடைந்தாள். இதையடுத்து தனது சேமிப்பு பணத்தில் இருந்து அவர்களுக்கு உதவ முடிவு செய்தாள்.

இதுகுறித்து தனது தந்தை வெள்ளையனிடம் தெரிவித்தாள். அவரும் மகளின் விருப்பத்தை வரவேற்றார். இதையடுத்து தியா பணம் சேகரித்து வந்த உண்டியலை உடைத்து பார்த்ததில் 24,347 ரூபாய் இருந்தது. அந்த பணத்தில் கைத்தறி நெசவாளர்கள், நாதஸ்வர கலைஞர் கள், பிறமாநில தொழிலாளர்கள், ஓட்டுனர்கள், திருமண மண்டபங்களில் வேலைபார்க்கும் துப்புரவு பணியாளர்கள் உள்பட நலிவுற்ற குடும்பத்தினர் 57 பேரை தேர்வு செய்து அவர்களது குடும்பங்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், குழந்தைகளுக்கு பிஸ்கெட் ஆகியவை வாங்கி கொடுக்கப் பட்டது.

கலெக்டர் பாராட்டு

இதை அறிந்த மாவட்ட கலெக்டர் அருண் நெகிழ்ச்சி அடைந்தார். மாணவி தியா மற்றும் அவரது பெற்றோரை நேற்று தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டினார். மேலும் கலெக்டராக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட சிறுமியை தனது இருக்கையில் அமர வைத்து, வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அந்த மாணவியிடம் மடிக்கணினிக்கான பணம் செலவாகி விட்டதே இனி என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டார். அதற்கு அவள் ‘நான் மீண்டும் சேமிப்பேன், அப்போதும் யாரேனும் பாதிக்கப்பட்டு உதவி கேட்டு வந்தால் அந்த பணத்தையும் அவர்களுக்கு வழங்கி விடுவேன்’ என்று தெரிவித்தாள்.

கொரோனாவால் வேலைஇழந்து, வருமானமின்றி தவித்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சேமிப்பு பணத்தில் மாணவி தியா நிவாரண பொருட்கள் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியின் உதவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Next Story