குடிமராமத்து திட்டத்தில் 61 கண்மாய்கள் புனரமைப்பு - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்


குடிமராமத்து திட்டத்தில் 61 கண்மாய்கள் புனரமைப்பு - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
x
தினத்தந்தி 14 May 2020 10:00 PM GMT (Updated: 15 May 2020 4:25 AM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் 61 கண்மாய்கள் புனரமைப்பு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா சேமனூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதார விவசாயிகள் நலச்சங்க உறுப்பினர்களுடன் முன்னேற்பாடு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் நீர்நிலைகளை பாதுகாத்திடவும், மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் அளவினை மேம்படுத்திடவும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கண்மாய்களில் விவசாயிகளின் பங்களிப்போடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கண்மாய்களின் பாசன விவசாய சங்கங்கள் அமைக்கப்பட்டு கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், மடைகளை பழுதுபார்த்தல் மற்றும் மறுகட்டுமானம், கழுங்குகளை பழுதுபார்த்தல், வரத்துக்கால்வாய்களை தூர்வாருதல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை பாசன சங்கங்களின் மூலம் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்போடு சம்பந்தப்பட்ட விவசாய சங்கங்களின் மூலமே நியமன முறையில் பணிகளை மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2016-17-ம் நிதியாண்டில் ரூ.10.06 கோடி மதிப்பில் 14 கண்மாய்களிலும், 2017-18-ம் நிதியாண்டில் ரூ.29.55 கோடி மதிப்பில் 58 கண்மாய்களிலும், 2019-20-ம் நிதியாண்டில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 141 கண்மாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மேலும் 339 மடைகள், 79 கழுங்குகள் புதுப்பிக்கப்பட்டும், சீரமைக்கப்பட்டும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் ரூ.38.79 கோடி மதிப்பில் 61 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும் சரியாக நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையினை குறியீடு செய்து ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையுடன் ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி அகற்றப்பட்டுள்ளது.

மேலும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும்போது ஒருவருக்கு ஒருவர் போதிய சமூக இடைவெளி கடைபிடித்திடவும், முக கவசம் அணிந்து பாதுகாப்புடன் பணியாற்றிடவும் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் சேமனூர் கண்மாயை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை(நீர்வள ஆதார அமைப்பு) உதவி பொறியாளர்கள் சீனிவாசன், ஆனந்த்பாபுஜி, சின்னமுத்துராமர், பரமக்குடி தாசில்தார் செந்தில்வேல்முருகன், சேமனூர் ஊராட்சி தலைவி பரக்கதவதி குமார், ஊராட்சி செயலர் ராமமூர்த்தி, கிராம தலைவர் சண்முகவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story