சேலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படுமா? வியாபாரிகள் எதிர்பார்ப்பு


சேலத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படுமா? வியாபாரிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 15 May 2020 5:09 AM GMT (Updated: 15 May 2020 5:09 AM GMT)

சேலம் மாநகராட்சி பகுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படுமா? என வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

சேலம்,

தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு தளர்வு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கூலித்தொழிலாளர்களும் எப்போதும்போல வேலைக்கு சென்று வருகிறார்கள். மளிகை மற்றும் காய்கறி கடைகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. ஆனால் மீன் மற்றும் இறைச்சி கடைகள் மட்டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட விதிக்கப்பட்டுள்ள தடை நீடித்து வருகிறது. இதனால் இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து சேலம் சூரமங்கலம் மீன் வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் முகமது அலி கூறியதாவது:-

மீன் மற்றும் இறைச்சி கடைகளை பொறுத்தவரையில் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் தான் வியாபாரம் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் பெரிய அளவில் வியாபாரம் இருக்காது. ஊரடங்கு தளர்வு காரணமாக பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் கடைகளை திறக்கக்கூடாது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

அனுமதி வழங்க வேண்டும்

ஏற்கனவே கடந்த 2 மாதங்களாக வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு எங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது மீன் வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எங்களது மீன் கடைகளை சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரித்து வருகிறோம். மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். எனவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் உரிய அனுமதி வழங்க வேண்டும்.

அதாவது ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதி வழங்கினால் போதுமானது. தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இறைச்சி மற்றும் மீன் விற்பனை நடைபெறுகிறது. அதேபோல் சேலம் மாநகராட்சி பகுதியில் மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்பார்ப்பு

தற்போது ஆட்டிறைச்சி கிலோ ரூ.800 வரையிலும், கோழி இறைச்சி (பிராய்லர்) கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாநகரில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் சூரமங்கலம் தர்ம நகரில் மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மார்க்கெட்டில் சுமார் 18 மீன் கடைகள் உள்ளன. ஊரடங்கு காரணமாக மீன் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வார நாட்களில் வாடிக்கையாளர்கள் வருகைக்காக காத்திருப்பதாகவும் வியாபாரிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் கோழி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள் தங்களது கடைகளில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Next Story