மீண்டும் பணி அமர்த்தக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் தர்ணா


மீண்டும் பணி அமர்த்தக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 15 May 2020 9:38 PM GMT (Updated: 15 May 2020 9:38 PM GMT)

மீண்டும் பணி அமர்த்தக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாமலைநகர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பணியாற்றி வந்த சி மற்றும் டி பிரிவு ஊழியர்களிடம் எந்தவித கலந்தாய்வும் செய்யாமல், பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு அலுவலங்களில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். குறைந்த ஊதியம் என்பதாலும், குடும்பத்தை பிரிந்து தவித்ததாலும் அதில் பல ஊழியர்கள் மன உளைச்சல் காரணமாக இறந்து விட்டனர்.

இந்த ஊழியர்களின் 3 ஆண்டு கால ஒப்பந்தம் முடிந்தவுடன் அவர்களை பணியில் இருந்து விடுவித்து அண்ணாமலை பல்கலைக்கழக பணிக்கு அனுப்பி விட வேண்டும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒப்பந்த காலமாக நிர்ணயிக்கப்பட்ட 3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.

தர்ணா போராட்டம்

இருப்பினும் ஊழியர்கள் அந்தந்த அரசு துறைகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. மேலும் அந்த ஊழியர்களை கட்டாயப்படுத்தி ஒப்பந்த காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

இதனை கண்டித்து பணி நிரவல் செய்யப்பட்ட ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர்களை பல்கலைக்கழகத்தில் மீண்டும் பணி அமர்த்தக் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

பல்கலைக்கழகத்தில் பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) கிருஷ்ணமோகன், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பதிவாளர் கிருஷ்ணமோகன் கூறுகையில், உங்களுடைய கோரிக்கைகள் அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இதுகுறித்து தமிழக அரசுதான் முடிவு செய்யும் என்றார். இதனையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பல்கலைக்கழகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story