ஊரடங்கு தளர்வு எதிரொலி: வாழைத்தார் விலை அதிகரிப்பு


ஊரடங்கு தளர்வு எதிரொலி: வாழைத்தார் விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 May 2020 4:00 AM IST (Updated: 17 May 2020 11:01 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வு எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார் விலை அதிகரித்து உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. போக்குவரத்து முடக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தனர். 

குறிப்பாக வாழைத்தார்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் வாழைத்தார்களை வெட்டாமல் மரத்திலேயே விட்டு வைத்தனர். இதன் காரணமாக வாழைத்தார்கள் பழுத்த நிலையில் கிடந்தன. உரிய விலை கிடைக்காததால் வாழை விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடைகள் திறக்க ஆரம்பித்து உள்ளன. மக்கள் அதிக அளவில் வெளியில் நடமாட தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக வாழைப்பழங்கள் விற்பனை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் வாழைத்தார் வரத்து குறைய தொடங்கி இருப்பதால் விலையும் அதிகரித்து உள்ளது.

விலை விவரம்

இதனால் ஊரடங்கு காலத்தில் ரூ.300-க்கு விற்பனையான செவ்வாழை ரூ.900 ஆகவும், ரூ.250-க்கு விற்பனையான பூலான்செண்டு ரூ.450-க்கும், ரூ.310-க்கு விற்பனையான ரஸ்தாலி ரூ.350-க்கும், ரூ.150-க்கு விற்பனையான பச்சை வாழை ரூ.350 முதல் ரூ.400 வரையும், ரூ.160-க்கு விற்பனையான நாட்டு வாழைத்தார் ரூ.250 ஆகவும் விலை அதிகரித்து விற்பனையானது. சக்கை ரூ.140-க்கும், கதலி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து வாழைத்தார் வியாபாரி கூறும்போது, “ஊரடங்கு காலத்தில் வாழைத்தார் விலை குறைவாக இருந்தது. அதிக அளவில் வரத்து இருந்தது. தற்போது தேனி மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய வாழைத்தார் தட்டுப்பாடாகி உள்ளது. உள்ளூர் வாழைத்தார்களும் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்ட நிலையில் வரத்து குறைய தொடங்கி விட்டது. மேலும் கடைகளும் திறக்கப்பட்டு இருப்பதால் தேவை அதிகமாகி உள்ளது. இதனால் கதலி, சக்கை வாழைத்தார்களை தவிர மற்ற அனைத்து வாழைத்தார்களும் விலை அதிகரித்து உள்ளது” என்றார்.

Next Story