கோவை அருகே, இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்


கோவை அருகே, இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
x
தினத்தந்தி 18 May 2020 3:45 AM IST (Updated: 18 May 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே உள்ள அகதிகள் முகாமில் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை,

கோவையை அடுத்த போளுவாம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனால் தற்போது கோவை மண்டலம் கொரோனா தொற்று இல்லாத பகுதியாக உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 8 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பும், 4 லட்சம் குடும்பங்களுக்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக போளுவாம்பட்டி இலங்கை அகதிகள் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 328 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் ரத்த உறவுகளான இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது மகிழ்ச்சியை தருகிறது. அதுமட்டுமல்லாமல், ஊரடங்கு காலத்தில் அனைவருக்கும் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 15 அம்மா உணவகங்களில் 3 வேளையும் சுமார் 22 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான மொத்த செலவுத்தொகை ரூ.43 லட்சத்தையும், கோவை புறநகர் மற்றும் மாநகர் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஊரடங்கு காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உதவும் கரங்களை வலுப்படுத்தும் வகையில் நல்லறம் அறக்கட்டளை மூலம் கோவை மாநகரில் உள்ள 8 பகுதிகளில் சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் சீங்குபதி, தணிக்கண்டி, சர்க்கார் போரொத்தி உள்ளிட்ட மலை கிராமங்கள் முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 27 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேல் கொரோனா தொற்று இல்லாத நிலை உள்ளது. தொழில்நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் இதுவரை கடைபிடித்து வரும் சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடித்து, தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இயற்கை பேரிடர்களில் இருந்து தமிழக அரசு மக்களை தொடர்ந்து பாதுகாக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story